பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்
நடிகர் பஹத் பாசில் சில ஆண்டுகளாக சந்தேகமே இல்லாமல் தென்னிந்திய அளவில் இயக்குனர்களாலும், தயாரிப்பாளர்களாலும், அவ்வளவு ஏன் ரசிகர்களாலும் மிகவும் தேடப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார். அவர் வில்லனாக நடித்தாலும், குணச்சித்திர கதாபாத்திரங்களில நடித்தாலும் கூட அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. அதேசமயம் அவர் தனக்கென லேட்டஸ்டான ஆண்ட்ராய்டு போன் எதையும் பயன்படுத்துவது இல்லை என்கிற தகவலை பிரபல மலையாள நடிகர் வினய் போர்ட் சமீபத்தில் கூறியுள்ளார். இவர் பிரேமம் படத்தில் சாய் பல்லவியை ஒருதலையாக காதலிக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது விரைவில் வெளியாக இருக்கும் பஹத் பாசிலின் ஓடும் குதிரை சாதும் குதிரை என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
பஹத் பாசில் பற்றி இவர் ஆச்சரியத்துடன் கூறும்போது, “அவர் மிகவும் பேசிக்கான லெவலிலேயே ஒரு செல்போனை பயன்படுத்துகிறார், அவரிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லை. அதுமட்டுமல்ல இன்ஸ்டாகிராமில் அவருக்கு எந்த அக்கவுண்டும் இல்லை. என்னை போன்றவர்கள் பெரும்பாலான நேரத்தை இன்ஸ்டாகிராமிலேயே செலவழிக்கிறோம். ஆனால் அப்படி ஸ்மார்ட்போன் கூட இல்லாத பஹத் பாசிலை தேடி எப்படி இந்திய அளவில் பல வாய்ப்புகள் வருகின்றன, அவரை மற்றவர்கள் எப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.