இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம்
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி, அடுத்தபடியாக அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது ஆறாவது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழகம், இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அட்லி பேசும்போது, ‛‛நான் இயக்கும் படங்கள் திரைக்கு வரும்போது அந்த படத்தின் கதைகளை காப்பியடித்ததாக விமர்சனங்கள் வெளியாகும், ஆனால் என்னை பொறுத்தவரை நான் நேரில் பார்த்த விஷயங்களை வைத்து தான் படம் எடுத்து வருகிறேன்.
குறிப்பாக பிகில் படத்தில் இடம் பெற்ற ராயப்பன் கேரக்டர், ஜேபிஆரை பார்த்து உருவாக்கியதுதான். அவர் கல்வி மட்டுமின்றி விளையாட்டுக்கும் நிறைய உதவி செய்திருக்கிறார். சத்தியபாமா கல்லூரியில் நான் முதலாம் ஆண்டு படித்தபோது ஒரு குறும்படம் எடுத்தேன். அதையடுத்து என்னை ஜேபிஆரை சந்திக்குமாறு கூறினார்கள். அவரை சந்தித்தபோது, கேமரா எடுத்துக்கோ, சீக்கிரம் டைரக்டர் ஆகிடு என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தை உண்மையாகிவிட்டது.
என்னுடைய பெற்றோர் டைரக்டர் ஆகும் வரை என்னை பார்த்துக் கொண்டார்கள். அதன்பிறகு நான் இன்று என்னவாக இருக்கிறேன் என்பதற்கு என்னுடைய மனைவி தான் முழு காரணம். என்னை ஒரு நல்ல மனுஷனாக மாற்றியதற்கு முக்கிய காரணம் என்னுடைய மகன் மற்றும் என் அண்ணன் நடிகர் விஜய் என்று பேசினார்.