நாகார்ஜுனாவுக்கு திருப்புமுனை தந்த 'குபேரா'
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் கதாநாயகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவரது மகன்களான நாக சைதன்யா, அகில் ஆகியோரும் தெலுங்கில் நடிகர்களாக இருக்கிறார்கள்.
நாகார்ஜுனா நடித்து கடைசியாக வெளிவந்த தெலுங்குப் படங்களான, 'நா சாமி ரங்கா, தி கோஸ்ட்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அவருடைய சமகால கதாநாயகர்களான பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் ஆகியோர் கூட சூப்பர் ஹிட் வசூல் படங்களைக் கொடுத்த நிலையில் 100 கோடி வசூல் பெறும் நடிகராக நாகார்ஜுனா இல்லை என்பதுதான் உண்மையான நிலவரம்.
இதனிடையே, நேற்று முன்தினம் வெளியான 'குபேரா' படத்தின் வரவேற்பும், வசூலும் அவருக்குத் திருப்புமுனையைக் கொடுக்கும் அளவிற்கு பாராட்டுக்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் தமிழ்ப் படமான 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாகார்ஜுனா. அதுவும் வரவேற்பைப் பெற்றால் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் அவருக்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து வரலாம்.