பிளாஷ்பேக்: கங்கை அமரனை நம்பி ஏமாந்த ஏவிஎம்
சில காலம் சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவிஎம் நிறுவனம், பாரதிராஜா வருகையை தொடர்ந்து அவரது அணியை சேர்ந்தவர்களின் படங்களை ஆர்வமுடன் தயாரித்தது. பாரதிராஜவுடன் 'புதுமைப் பெண்', பாக்யராஜூடன் 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட படங்களை தயாரித்தது. அவைகள் பெரும் வெற்றி பெற்று வசூலையும் அள்ளிக் கொடுத்தது.
அந்த வரிசையில் அப்போது சில வெற்றிப் படங்களை இயக்கிய கங்கை அமரனை வைத்து ஒரு படத்தை தயாரித்தது. அந்த படம் 'வெள்ளைப்புறா ஒன்று'. இந்த படத்தில் விஜயகாந்த் நாயகனாகவும், ஊர்வசி நாயகியாகவும் நடித்தனர். இவர்களுடன் சுஜாதா, சுரேஷ், சிவச்சந்திரன், சரத்பாபு, ஜெய்சங்கர், நளினி, சில்க் ஸ்மிதா, உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. இளையராஜா இசை அமைத்திருந்தார்.
படத்தின் தலைப்பை பார்த்து விட்டு ஏதோ அழகான கதை என்று தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு ஏமாற்றம். அது ஒரு வழக்கமான பழிவாங்கும் படமாக இருந்தது. அப்போது இந்தி மற்றும் ஆங்கில படங்களில் வந்திருந்த காட்சிகளை காப்பி அடித்து பல காட்சிகளை வைத்திருந்தார் கங்கை அமரன். இளையராஜாவின் பாடல்களும் பெரிதாக பேசப்படவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.