தமிழில் வரவேற்பு இல்லை என்றாலும் 100 கோடி வசூலில் 'குபேரா'
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'குபேரா'. இப்படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பு இருந்தே தெலுங்கில் மட்டுமே எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரானதாக சொல்லப்பட்டாலும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஏன் தனுஷ் உள்ளிட்டவர்கள் கூட தெலுங்கில்தான் கவனம் செலுத்தினர்.
தமிழ் வெளியீட்டிற்காக சென்னையில் ஒரே ஒரு விழாவை மட்டுமே நடத்திவிட்டு அதன்பின் பெரிய அளவில் எந்த ஒரு புரமோஷனும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். தனுஷ் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்கும் அளவிலான பாராட்டுக்கள் வந்தாலும் ஒரு டப்பிங் படம் போன்ற உணர்வு ரசிகர்களுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் இருந்தது. அதனால், தமிழில் 10 கோடிக்கும் சற்றே கூடுதலான வசூலைத்தான் இந்தப் படம் கொடுத்துள்ளதாம்.
அதே சமயம் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே இந்தப் படம் 50 கோடி வசூலைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். தனுஷ் நடித்து இதற்கு முன்பு தமிழ், தெலுங்கில் உருவான 'வாத்தி' படத்தின் வசூலை இந்தப் படம் முறியடித்து தனுஷுக்குத் தெலுங்கில் ஒரு மார்க்கெட்டை வளர்த்துவிடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 5 நாட்களில் உலக அளவில் இந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல்.