போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக்
ரஜினி நடிப்பில், அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‛கோச்சடையான்'. இதில் இணை இயக்குனராக பணியாற்றிய சூரிய பிரதாப் இப்போது ஒரு படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக கவுதம் ராம் கார்த்திக் (கவுதம் கார்த்திக்) நடிக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் கலந்த கிரைம் திரில்லராக உருவாகும் இதில் போலீஸ் அதிகாரியாக கவுதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. வித்துசனன் இசையமைக்க, ஒளிப்பதிவு பணியை அர்ஜுன் ராஜா கவனிக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், “தமிழ் சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. இயக்குநர் சூரிய பிரதாப் இந்த கதையை சொல்லும்போது அதை உணர்ந்தேன். கவுதமின் கேரியரில் இந்தபடம் ஒரு முக்கியமான அடையாளமாக மாறும்” என்றனர்.