நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்
கடந்த வருடம் பிப்ரவரியில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 200 கோடிக்கும் மேல் வசூலித்தது. மிகப்பெரிய பிரபலங்கள் என யாரும் அதில் நடித்திராத நிலையில் கேரளாவையும் தாண்டி தமிழகத்திலும் அந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் சவுபின் சாஹிர் தான் அந்த படத்தை தனது சகோதரர் மற்றும் நண்பருடன் இணைந்து தயாரித்திருந்தார்.
படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்த நிலையில் கேரளாவை சேர்ந்த சிராஜ் வலையதாரா என்பவர், இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக, தான் 8 கோடி கொடுத்ததாகவும் பட ரிலீஸுக்கு பிறகு லாபத்தில் 40 சதவீதம் கொடுப்பதாக சொன்ன தயாரிப்பாளர்கள் சொன்னபடி நடக்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தார் நடிகர் சவுபின் சாஹிர். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் விசாரணைக்கு சவுபின் சாஹிர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சவுபினுக்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்து அதற்குள் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து சவுபின் சாஹிர் அவரது சகோதரர் பாபு ஷாஹிர் மற்றும் இன்னொரு தயாரிப்பாளரான ஷான் ஆண்டனி மூவரும் போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகி, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இந்த விசாரணையில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் கிடைத்த லாபத்தொகை எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து போலீசார் பல கேள்விகளை கேட்டதாக சொல்லப்படுகிறது.