விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் 'தலைவன் தலைவி'. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சேலம் சரவணன், செம்பியான் வினோத், யோகி பாபு, ‛பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை ரோஷினி ஹரிபிரியன், தீபா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூலை 25ல் படம் ரிலீசாகிறது.
விஜய் சேதுபதியின் 52வது படமான இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை ரோஷினி, ‛‛தலைவன் தலைவி படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பு கிடைத்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் ராகவர்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். விஜய் சேதுபதியின் தங்கச்சி கதாபாத்திரம் தான். இந்தப் படத்தில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இதுவரைக்கும் நான் நடிக்காத கதாபாத்திரமாக இருந்தது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்'' எனப் பேசினார்.