காந்தி, நேரு பற்றி அவதூறு : ‛ஜெயிலர்' வில்லன் விநாயகன் மீது போலீசில் புகார்
பிரபல மலையாள வில்லன் நடிகர் விநாயகன். தமிழில் விஷாலின் ‛திமிரு', ரஜினியின் ‛ஜெயிலர்' போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். விநாயகன் என்றாலே வில்லங்கமும், பிரச்னைகளும், பஞ்சாயத்துகளும் தான். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வழக்கு பதிவாகி, பின்னர் மன்னிப்பு கேட்பார்.
சமீபத்தில் கேரள முன்னாள் முதல்வர் விஎஸ் அச்சுதானந்தன் காலமானார். இதுதொடர்பான நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய விநாயகன், ‛‛இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் அச்சுதானந்தன் இறக்கவில்லை.... எங்களுடன் வாழ்கிறார்'' என முழக்கமிட்டார்.
தொடர்ந்து வலைதளத்தில் தனது நாய் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛காந்தியும் இறந்தார், நேருவும் இறந்தார், இந்திரா, ராஜீவ்வும் இறந்தனர் என இன்னும் சில தலைவர்களின் பெயரையும் குறிப்பிட்டு சில அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எர்ணாகுளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிஜோ ஜோசப், கேரள டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் விநாயகன் மறைந்த தேசிய தலைவர்களை சமூக வலைதளத்தில் இழிவுபடுத்தி உள்ளார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் மனவேதனையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.