உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ்

'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் சில தெலுங்கு நடிகர்களும் ஒரு காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 80களின் இறுதியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் நாகார்ஜுனா. 1989ல் அவர் தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வெளியான 'இதயத்தை திருடாதே, சிவா' ஆகிய இரண்டு படங்களும் இங்கு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன.

அதன்பின் 1997ல் தான் நேரடியாக தமிழில் 'ரட்சகன்' படத்தில் நடித்தார் நாகார்ஜுனா. அதற்கடுத்து 2011ல் தமிழ், தெலுங்கில் தயாரான 'பயணம்', பின்னர் 2016ல் தமிழ், தெலுங்கில் தயாரான 'தோழா' ஆகியவற்றில் நடித்தார். அதே போல கடந்த மாதம் வெளியான தமிழ், தெலுங்கில் தயாரான 'குபேரா' படத்திலும் நடித்திருந்தார். அடுத்து 'கூலி' படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இத்தனை ஆண்டு கால சினிமா வரலாற்றில் நாகார்ஜுனா வில்லனாக நடிப்பது இதுதான் முதல் முறை.

இக்கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக ஆறு முறை சந்தித்து கதையைச் சொல்லி சம்மதிக்க வைத்துள்ளார் லோகேஷ். கல்லூரியில் படித்த நாட்களில் 'ரட்சகன்' படத்தைப் பார்த்து நாகார்ஜுனாவின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார் லோகேஷ். அப்போது நாகார்ஜுனாவின் ஹேர்ஸ்டைலைத்தான் அவரும் அவரது நண்பர்களும் வைத்திருந்தார்களாம். அந்த அளவுக்கு ரசிகராக இருந்து, அவரை தன் படத்திலேயே நடிக்கவும் வைத்திருக்கிறார்.

தனது டப்பிங் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நாகார்ஜுனா. ஆனால், அவர் நேரடியாக தமிழில் முதன் முதலில் நடித்த 'ரட்சகன்' படம் தோல்வியைத்தான் தழுவியது அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. இருந்தாலும் ஏஆர் ரஹ்மான் இசையில் அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !