படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம்
கடந்த வாரம் மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் ஜேஎஸ்கே (ஜானகி வி vs ஸ்டேட் ஆப் கேரளா) என்கிற படம் வெளியானது. இந்த படத்தின் டைட்டிலில் ஜானகி என்கிற பெயர் இடம் பெற்று இருந்தால் சிக்கலை சந்தித்து ஒரு வழியாக இரண்டு வார தாமதத்திற்கு பின் வெளியானது. இந்த படத்தை மகேஷ் நாராயணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கிறிஸ்டியன் கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி நடித்திருந்தாலும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பதால் இளம்பெண் கொலை வழக்கு சம்பந்தமாக சர்ச்சில் உள்ள ஒரு பாதிரியாரை விசாரிக்க செல்லும் காட்சிகள், அது பற்றி பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இது தேவையில்லாமல் மத துவேஷம் செய்வது போல இருக்கிறது என்று சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது..
இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் மகேஷ் நாராயணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “எந்த உள்நோக்கத்திலும் இந்த படம் எடுக்கப்படவில்லை. ஒரு இளம்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் மட்டும் தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை தவறாக கருதும் நீங்கள் அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய விஷயமான எந்த ஒரு பெண்ணிற்கும் தங்கள் வீட்டை விட்டு நகரத்திற்கு சென்று திரும்பவும் வீட்டிற்கு வருவதற்குள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான பப்ளிக் டாய்லெட்டுகள் இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பி இருந்தோம். அது பற்றி யாருமே பதில் கூறவில்லை. இப்படி மதத்தை நாங்கள் புண்படுத்தி இருப்பதாக உள்நோக்கம் கற்பிப்பவர்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர்கள் இந்த பப்ளிக் டாய்லெட் இல்லாததால் வெளியே சென்று வரும்போது படும் அவஸ்தை பற்றி கேட்டு தயவு செய்து அதையும் பதிவிடுங்கள்” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.