3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ரைசா வில்சன். 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு 'தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்ஐஆர், பொய்கால்குதிரை, காபி வித் காதல், கருங்காப்பியம்' படங்களில் நடித்தார். அதன்பிறகு சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த ரைசா, தற்போது 3 வருடங்களுக்கு பிறகு 'நோவா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான 'பார்ட்னர்' படத்தை தொடர்ந்து ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரி'கும் படம் நோவா. இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மைலோ இப்படத்தை இயக்குகிறார்.
'ஆண்மை தவறேல்' துருவா, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யுடியூப் புகழ் பைனலி ஸ்வாதிகா மற்றும் பைனலி கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். யுவராஜ் சந்திரன் இசையமைக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இயக்குநர் மைலோ படம் குறித்து கூறும்போது,“ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஒரு ஜானருக்குள் இந்த கதையை அடக்கி விட முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார் ரைசா வில்சன்.
அதுமட்டுமல்ல கன்னடம், மலையாளம், பெங்காலி என மொழிக்கு ஒரு நடிகரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். பிரபல மலையாள வில்லன் நடிகரான சைன் டாம் சாக்கோவின் தம்பி ஜோ ஜான் சாக்கோ இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பு முழுவதும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தான் நடைபெற்றுள்ளது. என்று கூறினார்.