உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்

பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் ஒவ்வொரு படமாக முடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ராஜா சாப். இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவர் இருவரும் திடீர் விசிட் அடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர், இந்த படப்பிடிப்பு இடைவேளைக்கு நடுவில் தங்களது 'டார்லிங்' ஆன பிரபாஸை பார்ப்பதற்காக நட்பு ரீதியாக ராஜா சாப் படப்பிடிப்பு தளத்திற்கு இவர்கள் விசிட் அடித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக பிரபாஸை வைத்து புச்சிகாடு (2008) மற்றும் ஏக் நிரஞ்சன் (2009) என இரண்டு படங்களை அடுத்தடுத்த வருடங்களில் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !