உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு

பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛கூலி' படம் ஆகஸ்ட் 14ல் ரிலீசாகிறது. நாகார்ஜூனா, சவுபின் சாகிர், அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (ஆக.,2) நடைபெற்றது.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: கைதி படம் பார்த்துவிட்டு லோகேஷூக்கு போன் செய்து வாழ்த்தினேன். அவரை வீட்டுக்கு அழைத்து கதை கேட்டேன். அவரோ நான் கமல் ரசிகர் என்றார். கதையை சொல்ல சொன்னால் கமல் ரசிகன் என்கிறாரே என நினைத்தேன். விக்ரம் முடிந்தபின் அவரை அனுப்பி வைப்பதாக கமல் சொன்னார். அவரை மிஸ் பண்ணக்கூடாது என நினைத்தேன். முதலில் இந்த படத்திற்கு ‛தேவா' என்று டைட்டில் வைத்திருந்தோம். பின்னர் பெயர் மாறியது. ‛கூலி' படம் ஆர்கானிக்காக உருவானது.

இந்த படத்தின் உண்மையான ஹீரோ லோகேஷ் தான். லோகேஷிடம் மற்ற படங்கள் பான் இந்தியா ஹிட் ஆகுது இந்த படத்தை பான் இந்தியா அளவில் எடுங்கள் என்று சொன்னேன். ரிலீஸ் தேதியை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றேன். எந்த இயக்குனராவது முதல் ஷாட்டை பிணத்துக்கு மாலை போட சொல்லி எடுப்பார்களா? ஆனால் லோகேஷ் அதை செய்தார்.

அனிருத் தான் இந்தியாவின் முதல் ராக்ஸ்டார். அவரை எவ்வளவு வேண்டுமானாலும் புகழலாம். நான் லேட்டாக சென்றால் சவுபின் டான்சை பார்க்க முடியவில்லை. எனக்கும் சத்யராஜூக்கும் கருத்து ரீதியான முரன்பாடு இருக்கலாம். ஆனால் அவர் தன் மனதில் பட்டதை பேசிவிடுவார். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பலாம் ஆனால் உள்ளே வைத்துக் கொண்டிருப்பவர்களை நம்ப முடியாது.

வில்லனாக நாகர்ஜூனா வருகிறார். வெங்கட்பிரபு படத்தில் அஜித் பேசும் ‛நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனா நடிக்கிறது' என்ற வசனம் போல, நாகார்ஜூனாவும் எத்தனை காலம்தான் நல்லவனாக இருப்பது என வில்லனாக மாறிவிட்டார். கமலே வியக்கும் அளவுக்கு அவர் நடித்துள்ளார். என் வெற்றிக்கான ரகசியம் உழைப்பு மட்டுமல்ல, ஆண்டவன் குரல். எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியே கவுரவம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !