'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு
கிங்டம் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் 'கிங்டம்'. இந்த படத்தில் இலங்கை தமிழர்களை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தியேட்டர் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை, உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிமன்றம், ‛‛தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்த பின்னர், தியேட்டரில் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. அதேசமயம் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் உரிய அனுமதி பெற்று செய்ய வேண்டும். அதுவும் ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும்'' என தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்த நிலையில், சென்சார் சான்று வழங்கப்பட்ட பிறகு படம் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஆகவே கிங்டம் படம் திரையிட்டுள்ள தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.