பிளாஷ்பேக் : டைட்டில் கார்டு நடைமுறையை மாற்றிய படம்
திரைப்படங்களுக்கு டைட்டில் கார்டு மிக முக்கியமானது. சினிமா தொடங்கிய காலத்திலேயே இந்தமுறை வந்துவிட்டது. பழைய கருப்பு வெள்ளை படங்களில் டைட்டில் கார்டு மிக பெரியதாக இருக்கும். எல்லா நடிகர் நடிகைளின் பெயர் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரும் இடம்பெறும். டைட்டிலை நீளமாக வைத்ததற்கு இன்னொரு காரணம் தாமதமாக படம் பார்க்க வருகிறவர்களுக்கு கொஞ்ச கால அவகாசம் கிடைக்கும்.
இந்த நிலையை மாற்றி நடிகர், நடிகைகளின் பெயர் டைட்டிலில் இல்லாமல் வெளிவந்த முதல் படம் 'பார்த்தால் பசி தீரும்'. நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை மட்டும் காட்டி 'உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்' என்று முடித்துக் கொள்ளப்பட்டது டைட்டில். இந்த ஸ்டைல் பின்னர் பல படங்களில் பின்பற்றப்பட்டது.
'பார்த்தால் பசி தீரும்' படத்தில் சிவாஜிக்கும், ஜெமினி கணேசனுக்கும் சம அளவிலான பங்கு இருக்கும், இதனால் யார் பெயரை முதலில் போடுவது என்ற சர்ச்சை உருவானதால் இந்த முறை பின்பற்றப்பட்டதாகவும் சொல்வார்கள்.