கதை பேசப்படணும், அதனால நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல்
மலையாளத்தில் அனு மோலுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆனால், தமிழில் அவர் நடித்த ஒரு நாள் இரவில், திலகர் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. மீண்டும் மலையாளத்தில் கவனம் செலுத்தினார். அதன்பின் தமிழில் அவர் நடித்த வெப்சீரிஸான ‛அயலி' சூப்பர் ஹிட்டாக, அவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகரித்தனர். இப்போது தமயந்தி இயக்கி உள்ள 'காயல்' என்ற படத்தில் அம்மாவாக நடித்துள்ளார் அனுமோல். இதில் லிங்கேஷ் ஹீரோ, காயத்ரி மற்றும் பின்னணி பாடகியான ஸ்வகதா ஹீரோயினாக நடிக்கிறார்கள்.
இந்த படம் ஆணவக்கொலை, தென் மாவட்ட சமூக பிரச்னை, பெண்களின் அரசியல் என பல விஷயங்களை அழுத்தமாக பேசுகிறதாம். படம் குறித்து பேசிய அனுமோல், ‛‛எழுத்தாளர் தமயந்தி இந்த படத்தின் கதையை சொன்னார். முதலில் அவரை பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ளவில்லை. பின்னர், அவர் யார் என்பதை புரிந்து கொண்டேன். இந்த படத்தை பலர் பார்த்து இருக்கிறார்கள், பாராட்டி இருக்கிறார்கள். இந்த கதை பேசப்பட வேண்டும். அனைத்து மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக நடித்தேன். புதுச்சேரி, வேளாங்கண்ணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த பட தயாரிப்பாளரை பார்க்காமலே இயக்குனர் படமெடுத்துள்ளார். நானும் அப்படிதான் நடித்தேன். அவர் வெளிநாட்டில் இருந்து இந்த படத்தை தயாரித்தார். இப்படிப்பட்ட கதைகள், தயாரிப்பாளர்கள் மலையாள சினிமாவுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
கிட்டத்தட்ட இயக்குனர் தமயந்தி வாழ்க்கையில் இருந்து இந்த படத்தின் கரு உருவாகி இருக்கிறதாம்.