65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்
நடிகர் பஹத் பாசில் இன்று மலையாள திரையுலகையும் தாண்டி தென்னிந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். மிகப்பெரிய ரசிகர் வட்டமும் அவருக்கு உருவாகிவிட்டது. அவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு தென்னிந்திய அளவில் தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பஹத் பாசில் நடித்த முதல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அவருக்கு ஏழெட்டு வருடம் இடைவெளி விழுந்தது. அதன் பிறகு அவர் நடித்த படம் தான் சப்பா குரிசு. இந்தப் படத்தின் வெற்றி பஹத் பாசிலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதை லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்திருந்தார்.
“இதில் நடிக்கும்போது பஹத் பாசில் கடுமையான உழைப்பை கொடுத்தார். அவரிடம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டும் என கேட்டபோது நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என கூறினார். இல்லை தாராளமாக நீங்கள் ஒரு தொகையை சொல்லுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை என்று சொன்னதும், நாங்கள் ஒரு போட்டிக்கு தயாராகி வருவதாகவும் அதற்கு கட்டுவதற்கு 65 ஆயிரம் ரூபாய் தேவை என்றும் அவர் கேட்டார். அப்போது நான் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்தேன். இன்று அவரது உயரம் எங்கேயோ போய்விட்டது. இன்று ஐந்து கோடி, பத்து கோடி கொடுத்தாலும் கூட அவரை படங்களில் ஒப்பந்தம் செய்வது மிகப்பெரிய டாஸ்க் ஆகவே இருக்கிறது, இதுதான் சினிமாவின் மேஜிக்” என்று கூறியுள்ளார்.