இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா
இந்தியளவில் முன்னணி நடிகையும், மூத்த நடிகையுமான வைஜெயந்தி மாலா இன்று (ஆக.,13) தனது 92வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ், இந்தியில் கொடிகட்டி பறந்த வைஜெயந்திமாலா, சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, 13 வயதில் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தவர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வாழ்க்கை (1949) படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி, தமிழிலும் இந்தியிலும் பல வெற்றிபடங்களை கொடுத்தார்.
தமிழில் ‛இரும்புத்திரை, தேன்நிலவும், பார்த்திபன் கனவு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இன்றைக்கும் வைஜெயந்திமாலா என்றால் நமக்கு ‛வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் பத்மினியுடன் அவர் ஆடிய ‛கண்ணும் கண்ணும் கலந்து' என்ற போட்டி நடனம்தான் நினைவுக்கு வரும். இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர். பின்னர் அரசியலுக்கும் வந்தார்.
1984ல் காங்கிரஸ் சார்பில் தென்சென்னை தொகுதி எம்பியானார். 63 படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பரதநாட்டியத்திலும் புகழ் பெற்று விளங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, அவர் நடனம் ஆடிய வீடியோ வைரலானது. ஐ.நா.சபையில் நடனம் ஆடிய பெருமை பெற்றவர், இந்திய அரசு சார்பில் சமீபத்தில் பத்மபூஷன் விருதுபெற்றவர், இப்போது குடும்பத்தினருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.