33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான்
இந்தியத் திரையிசை உலகில் 33 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய ஒலி, இசை கேட்டது. அதற்கு முன்பு வரை கேட்ட இசைக்கும், அதற்குப் பிறகு வந்த இசைக்கும் அப்படி ஒரு துல்லியம், தெளிவு. அதை 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி 'ரோஜா' படம் மூலம் கொண்டு வந்தவர் ஏஆர் ரஹ்மான்.
கடந்த 33 ஆண்டுகளாக இந்தியத் திரையுலகில் தனிக் கொடியை பறக்கவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாது வெளிநாட்டுத் திரைப்படங்களிலும் அவருடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, கிராமி விருது என சர்வதேச விருதுகள், இந்திய அரசின் தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, மாநில விருதுகள் என பல விருதுகளை வென்றவர்.
அவரது இசையின் மூலமாக தமிழ்த் திரைப்பட இசை, ஹிந்தி இசை ஆகியவை உலக அளவில் பேசப்பட்டன. எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் தானுண்டு, தன் இசையுண்டு என பயணித்து வருபவர்.
அடுத்த சில ஆண்டுகளுக்கான படங்களில் இப்போதே மிகவும் பிஸியாக இருப்பவர். உலகத்தில் எங்கு சுற்றி வந்தாலும் தன்னை ஒரு 'சென்னை வாசி' என்று சொல்லிக் கொள்பவதில் பெருமை மிக்கவர்.
அவருடைய 33 ஆண்டு திரையுலகப் பயணத்திற்கு நாமும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.