உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை

‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இதில் இளையராஜா இசை அமைத்த புகழ்பெற்ற பாடல்களான 'இளமை இதோ இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்...', 'என் ஜோடி மஞ்சக் குருவி...' ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

படம் தியேட்டர்களில் ஓடி முடிந்த நிலையில் ‛‛குட் பேட் அக்லி படத்தில் எனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், இது பதிப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. நான் இசையமைத்த பாடல்களை இந்த படத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்'' எனக் கூறி இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று(செப்., 8) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் விளக்கம் கேட்டு விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.

முன்னதாக, படத்தில் பயன்படுத்திய இளையராஜாவின் இந்த பாடல்களின் உரிமம் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் அனுமதி பெற்றே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தயாரிப்பு தரப்பு ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !