கட்டிட பணிகளால் தேர்தல் நடத்தவில்லை: கோர்ட்டில் நடிகர் சங்கம் தகவல்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். 2022ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று விஷால், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளின் கீழ் சங்கம் செயல்பட்டு வருகிறது. இவர்களின் பதவி காலம் முடிந்து விட்டாலும் கட்டிட பணிகள் நடப்பதால் தேர்தல் நடத்தாமல் தற்போதுள்ள நிர்வாகிகளே தொடர்வார்கள் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இதை எதிர்த்து இந்த தீர்மானம் செல்லாது என்று அறிவித்து தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று நம்பிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கு என்ன சிக்கல் உள்ளது என்று நடிகர் சங்க வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் “தேர்தல் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்பதால், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்'' என்று விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கை வருகிற 15ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் அப்போது சங்க நிர்வாகிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.