'காந்தாரா சாப்டர் 1' டப்பிங்கை முடித்த ருக்மிணி வசந்த்
கடந்த 2022ல் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான 'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கிட்டத்தட்ட 400 கோடி வசூலித்தது. தென்னிந்திய மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதன் முன்கதையை 'காந்தாரா சாப்டர் 1' என்கிற பெயரில் இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. சமீப காலமாக முன்னணி வரிசைக்கு உயர்ந்து வரும் நாயகி ருக்மிணி வசந்த் இந்த படத்தில் 'கனகாவதி' என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'ஏஸ்', சமீபத்தில் வெளியான 'மதராஸி' ஆகிய படங்களை தொடர்ந்து ருக்மிணி வசந்தின் அடுத்த படமாக இது வெளியாகிறது. வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படத்தில் நாயகி ருக்மிணி வசந்த் தற்போது தன்னுடைய காட்சிகளுக்காக டப்பிங் பேசி நிறைவு செய்துள்ளார். இது குறித்த டப்பிங் வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ருக்மிணி வசந்த்.