இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்'
சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா', விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' ஆகிய படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. அவர்களது திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கள் படங்களான இந்த படங்களை இயக்கிய இயக்குனர்களான சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ஆர்.கே செல்வமணி இருவரும் இந்த படங்களின் டிஜிட்டளுக்கு மாற்றும் பணியில் தங்களது ஒத்துழைப்பை கொடுத்ததுடன் படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து பல சேனல்களில் பேட்டி அளித்து தங்களது பங்களிப்பை கொடுத்தனர்.
அப்படி மலையாளத்தில் மம்முட்டியின் திரையுலக பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த 'சாம்ராஜ்யம்' என்கிற படம் விரைவில் டிஜிட்டலில் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் அந்த படத்தின் இயக்குனருக்கு இதில் இணைந்து பணியாற்ற அழைப்பும் விடுக்கப்படவில்லை. இப்படி ரீ ரிலீஸ் செய்யப்படுவது குறித்த செய்தியும் தெரிவிக்கப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை படத்தின் இயக்குனரான ஜோமோன் வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 35 வருடங்களுக்கு முன்பு ஜோமோன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் சாம்ராஜ்யம். கல்ட் கிளாசிக் படம் என்கிற வரவேற்பை பெற்ற இந்த படம் மம்முட்டியின் முக்கிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதற்காக சமீபத்தில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட இந்த படத்தின் டிரைலர் வெளியானது. ஆனால் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டிருந்தாலும் படத்தின் டிரைலர் தரம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவித்தனர். ஒரு சிலர் இது குறித்து படத்தின் இயக்குனர் ஜோமோனுக்கு போன் செய்து தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் ஜோமோன் இது குறித்து கூறும்போது, “இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் விஷயம் குறித்து தயாரிப்பு நிறுவனம் என்னிடம் இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை. அவர்களாகவே இந்த பணியை செய்து வருகிறார்கள். சிலர் நான் இந்த டிரைலரை சரியாக உருவாக்கவில்லை என்பது போல என்னிடம் குறைபட்டுக் கொண்டபோது தான் இந்த படம் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பதே எனக்கு தெரிந்தது. நான் இந்தப்படத்தின் ரீ ரிலீஸில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'சாம்ராஜ்யம் 2' என்கிற பெயரில் படம் வெளியானது. நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்த இந்த படத்தை இயக்குனர் பேரரசு இயக்கியிருந்தார். படம் தோல்வி படமாக அமைந்தது. அப்போதும் பட தயாரிப்பு நிறுவனம் இரண்டாம் பாகம் எடுக்கும் தகவலை கூட இயக்குனர் ஜோமோனுக்கு சொல்லவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.