எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர் எம்.என்.ராஜம். ரத்தக்கண்ணீர், பாசமலர், நல்லதம்பி, நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இன்றைய தலைமுறைக்கு சொல்ல வேண்டுமானால் வின்னர், திருப்பாச்சி, மருதமலை படங்களில் பாட்டியாக நடித்தவர். இவர் கணவர் ஏ.எல்.ராகவன் பிரபல பின்னணி பாடகர், மறைந்துவிட்டார். 90வயதான எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.
சென்னையில் நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு வயது முதிர்வு காரணமாக வீல்சேரில் வந்து, அந்த விருதை பெற்றுக் கொண்டார் எம்.என்.ராஜம். அப்போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தி அவருக்கு மரியாதை செய்தது. அவரின் காலில் விழுந்து பலர் ஆசி பெற்றனர்.
மதுரையில் பிறந்து வளர்ந்த எம்.என்.ராஜம் யார். சென்னை கோபாலபுரத்தில் அவர் வீடு எங்கே இருந்தது, அவர் கணவர் ஏ.எல்.ராகவன் யார் என விரிவான தகவல்களை வழங்கி வாழ்த்தி பேசினார் நடிகர் சிவகுமார். தனது 17வது வயதில் எம்.என்.ராஜத்தை பார்த்ததையும், பிற்காலத்தில் அவருடன் நடித்ததையும், ஆண்கள் மட்டுமே நடித்து வந்த நாடக கம்பெனிகளில் தனி பெண்ணாக நடித்த எம்.என்.ராஜம் திறமை, தைரியத்தையும் சிவகுமார் விளக்கினார்.
ஏற்புரை நிகழ்த்திய எம்.என்.ராஜம் 'தான் 7 வயதில் நடிக்க வந்தேன். சில ஆண்டுகள் வரை நடித்தேன். தானே நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்றார். மேலும் அவர் பேசுகையில் ''அந்த காலத்தில் நடிகர் சங்க நிர்வாகத்தில் எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தபோது, நடிகர்கள் வீட்டு விசேஷங்களில் குடும்ப உறுப்பினர்கள் மாதிரி கலந்து கொண்டு வாழ்த்துவார்கள், ஒரு நடிகைக்கு பிரச்னை என்றால், உடனே அது குறித்து விசாரித்து, அதை தீர்த்து வைப்பார்கள். இப்போதைய நிர்வாகமும் நல்லது செய்கிறது.'' என்றார்.
தேசியவிருது பெற உள்ள நடிகை ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாசுக்கும் நடிகர் சங்க பொதுக்குழுவில் கவுரவம் செய்யப்பட்டது. அப்போது பேசிய ஊர்வசி 'நான் மலையாள படத்துக்காக தேசியவிருது பெறுகிறேன். ஆனாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதால் என்னை அழைத்து பாராட்டுகிறார்கள். வருங்காலத்தில் தமிழில் இப்படி தேசிய விருது பெறுபவர்களை மலையாள நடிகர் சங்கம் அழைத்து பாராட்ட வேண்டும்' என்றார்.