தாதா சாஹேப் பால்கேவுக்கு மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும் : ராம் கோபால் வர்மா
இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாஹேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் மோகன்லாலுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டில் இருந்தும் பல பிரபலங்கள் மோகன்லாலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் மோகன்லாலுக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தன் வாழ்த்துக்களை சற்றே வித்தியாசமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தாதா சாஹேப் பால்கே என்பவர் முதல் திரைப்படத்தை இயக்கினார் என்பதை தவிர எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் இயக்கிய அந்த படத்தையோ அல்லது அந்த படம் பார்த்தவர்களையோ கூட நான் சந்தித்தது இல்லை. ஆனால் மோகன்லாலை நான் பார்த்து தெரிந்து கொண்டதில் இருந்து சொல்வது என்னவென்றால், தாதா சாஹேப் பால்கேக்கு நிச்சயமாக மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும்” என்று மோகன்லால் பற்றி மிக உயர்வாக புகழ்ந்துள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் இந்த வித்தியாசமான பாராட்டை பார்த்துவிட்டு மோகன்லால் கூறும்போது, “அவர் சொன்னதை நான் ஒரு பிளாக் காமெடியாக பார்க்கிறேன். அவருடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவருடன் கம்பெனி என்கிற ஒரு கல்ட் கிளாசிக் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக தனது உணர்வை அவர் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.
2002ல் ராம்கோபால் வர்மா ஹிந்தியில் இயக்கிய கம்பெனி என்கிற படத்தில் மோகன்லால் நடித்திருந்தார் என்பதும் கடந்த வருடம் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வந்தபோது அந்த படப்பிடிப்பு தளத்திற்கு ராம்கோபால் வர்மா நேரிலேயே வந்து மோகன்லாலை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.