உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காப்பிரைட் வழக்கு : ஏஆர் ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து

காப்பிரைட் வழக்கு : ஏஆர் ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'வீரா ராஜா வீரா' பாடல் பதிப்புரிமை மீறல் என்ற வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்திய கிளாசிக்கல் பாடகர் பையாஸ் வாசிபுதீன் டாகர் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார். அவரது தந்தை நாசில் பையாசுதீன் டாகர் மற்றும் மாமா ஜருதீன் டாகரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடலில் இருந்து 'வீரா ராஜா வீரா' பாடல் நகல் எடுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இரண்டு பாடல்களும் வெவ்வேறு வரிகளைக் கொண்டிருந்தாலும், இசையமைப்பு சிவ ஸ்துதியுடன் ஒத்திருந்ததாக பையாஸ் கூறியிருந்தார். ஏப்ரல் மாதம் 25ம் தேதியன்று தனி நீதிபதி டாகருக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியிருந்தார். ஏஆர் ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர்கள் 2 லட்சம் நீதிமன்ற செலவு உட்பட 2 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கை எதிர்த்து ஏஆர் ரஹ்மான் மேல்முறையீடு செய்திருந்தார். மே 6 அன்று இடைக்காலத் தடை உத்தரவு, ஒரு பிரிவு அமர்வால் நிறுத்தி வைக்கப்பட்டது. ரஹ்மான், தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டிய 2 கோடி டெபாசிட்டை மட்டும் செலுத்த உத்தரவிட்டது.

இன்று வழக்கு நீதிபதிகள் ஹரிசங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏஆர் ரஹ்மானின் மேல் முறையீட்டு மனுவை அனுமதித்து ஒரு மனதான கருத்துக்களை நீதிபதிகள் தெரிவித்தனர். தனி நீதிபதியின் சவாலான உத்தரவை கொள்கை அடிப்படையில் ரத்து செய்துள்ளோம் என்றும் கூறினர். இருப்பினும், இந்த கட்டத்தில் உண்மையான மீறல் கேள்வியை இன்னும் ஆராயவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !