ரஜினி நடித்த 'மனிதன்' படம் அடுத்த மாதம் 10ம் தேதி மறு வெளியீடாகிறது. இதே 'மனிதன்' என்ற டைட்டிலில் 1953ம் ஆண்டு வெளிவந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மலையாள எழுத்தாளர் முதுகுளம் ராகவன் பிள்ளை எழுதிய 'மனுஷ்யன்' நாடகம் கேரள முழுக்க பிரபலம். இந்த நாடகத்தை டிகேஎஸ் சகோதரர்கள் தமிழில் நடத்தி வந்தனர். பின்னர் அது திரைப்படமானது.
இந்த படத்தை கே.ராம்நாத் இயக்கினார், எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தது. டி.கே. சண்முகம், டி.கே. பகவதி, மாதுரி தேவி, எஸ்.ஏ. நடராஜன், கிருஷ்ணகுமாரி, பண்டரி பாய், சி.வி.வி. பந்துலு, எம்.எஸ். கருப்பையா, கே. ராமசாமி ஆகியோர் நடித்தனர்.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஒரு இளம் மனைவி (கிருஷ்ணகுமாரி) பற்றிய கதை. கணவர் ராணுவ டாக்டராக எல்லையில் பணியாற்றி வருகிறார். கணவரை பிரிந்து தவிக்கும் மனைவி, அதே குடும்பத்தில் உள்ள ஓவியரோடு (பகவதி) நெருக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகிறார்.
ஓவியர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, அவர் அமைதியைத் தேடிச் செல்கிறார். மும்பையில் ஒரு கார் விபத்தில் சிக்குகிறார். அவரை காப்பாற்றுகிறார் கிருஷ்ணகுமாரியின் கணவரான ராணுவ மருத்துவர். அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவர் தனது கதையை சொல்கிறார். தான் ஒரு பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கியதை சொல்கிறார். அவர் ஏமாற்றியவர் தனது மனைவி என்பதை அறியும் டாக்டர் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த கதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ராணுவ வீரர்களையும், அவர்களது மனைவிமார்களையும் படம் தவறாக சித்தரிக்கிறது, படத்தை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தது. அன்றைய காலகட்ட மக்களும் படத்தின் கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.