உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே…

அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே…

2025ம் ஆண்டில் நேற்றுடன் மொத்தம் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. எஞ்சியுள்ள மூன்று மாதங்களில் சுமார் 50 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த மூன்று மாதங்களில் குறிப்பிடும்படியான முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என்ற சூழல்தான் உள்ளது.

அடுத்த பெரிய வெளியீடாக அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'இட்லி கடை' படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்குப் பிறகு தீபாவளிக்கு வெளியாக உள்ள படங்களும் வளரும் ஹீரோக்களின் படங்கள்தான். அதற்கடுத்து உள்ள வாரங்களிலும் சிறிய பட்ஜெட் படங்களே அதிகம் வர உள்ளது. அதனால், பல படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

பெரிய நடிகர்கள் படங்கள் என்று பார்த்தால், விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளிவர உள்ளது. அதே சமயத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' படமும் வெளியாகிறது.

ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படம் அடுத்த வருடம் ஜுன் 12ல் வெளியாக உள்ளது. கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகிவிட்டாலும் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவே இல்லை. அஜித் அடுத்து நடிக்க உள்ள படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. விக்ரம் அடுத்து நடிக்க உள்ள படம் எது என்பது இன்னும் முடிவாகவில்லை.

சூர்யா நடித்து வரும் 'கருப்பு' படத்தின் வெளியீடு குறித்து எந்தத் தகவலும் இல்லை. கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' டிசம்பர் வெளியீடு என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், அறிவித்தபடி வருமா என்பது அப்போதுதான் தெரியும். ஏற்கெனவே மிகவும் தாமதமாகி வரும் படம்.

விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படத்தின் தலைப்பு அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மகுடம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இதுதான் இப்போதைய நிலவரம். அடுத்த மூன்று மாதங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான வெளியீடுகளின் இடைவெளி தவிர்க்க முடியாததாக இருக்கிறது. 2026ம் ஆண்டுதான் மீண்டும் ஒரு வெளியீட்டுப் பரபரப்பு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

angbu ganesh, chennai
2025-10-03 12:42:55

இனி மலையாளம் கன்னடம் தெலுகு படங்களை தமிழுக்கு மொழி பெயர்த்து பக்க வேண்டியதுதான் எதுக்கு தண்ட செலவு