'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை'
விஜயதசமி, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. அக்டோபர் 1ம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படம் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. அக்டோபர் 2ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' கன்னடப் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
'காந்தாரா' படம் 2022ல் வெளியான போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் பெரிய வெற்றியைப் பெற்று 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனால், அதன் 'முன்பாகப்' படமான 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது. படம் நன்றாக அமைந்துவிட்டால் 1000 கோடி வசூலையும் பெறும் என்று யூகிக்கிறார்கள்.
'காந்தாரா 1' படத்தின் போட்டியை 'இட்லி கடை' கடுமையாக சமாளிக்க வேண்டி இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட தியேட்டர்கள் கிடைப்பதும் 'இட்லி கடை' படத்திற்கான சிக்கல். தமிழில் ரெட் ஜெயன்ட் வெளியிடுவதால் பிரச்சனை இருக்காது. அந்தப் போட்டியை சமாளித்து 'இட்லி கடை' எப்படி வரவேற்பையும், வசூலையும் பெறும் என்பது இப்போதைய கேள்வியாக உள்ளது.