பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி
ஜெயலலிதாவை உலகத்திற்கே தெரியும். அவரது தாயார் சந்திபா பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு காலத்தில் ஸ்டைலிஷான வில்லி வேடங்களில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி வித்யாபதி பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். சந்தியா, ஜெயலலிதா இருவரையுமே சினிமாவுக்கு கொண்டு வந்தவர் அவர்தான்.
அவரை அடையாளம் காண 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தை சொல்லலாம். அதில் எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின் மனைவியாக வில்லித்தனமான சலீமா கேரக்டரில் நடித்தவர்தான் வித்யாவதி. விமான பணிப்பெண்ணாக இருந்த வித்யாவதி சினிமாவில் நடிக்க ஆசை கொண்டு அந்த பணியை விட்டுவிட்டு வந்தார்.
கவர்ச்சியான தோற்றமும், வெளிப்படையான சுபாவமும் உள்ளவராக இருந்த வித்யாவதியின் இயற்பெயர் அம்புஜவல்லி. சினிமாவிற்காக வித்யாவதி என்று மாற்றிக் கொண்டார். 1951ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தார். இவரது வருகைக்குப் பின்னரே இவரது அக்கா சந்தியா திரையுலகில் நுழைந்தார்.
அன்றைய பிரபல நடிகரும், தயாரிப்பாளர், இயக்குநருமான சித்தூர் வி.நாகையா 1953ம் ஆண்டு தயாரித்து, நடித்த 'என் வீடு' படத்தில் வித்யாவதி வில்லி வேடத்தில் அறிமுகமானார். பானுமதி இயக்கிய 'சண்டி ராணி' படத்திலும் வில்லியாக நடித்தார்.
அன்றைய சென்னையில் பெரும் கோடீஸ்வரர்கள் வாழ்ந்த பகுதியான ஆழ்வார்பேட்டையில் முதன் முதலில் பங்களா கட்டி குடியேறினார். சொந்த கார் வாங்கி அதை தானே ஓட்டிச் சென்றார். சிகரெட் புகைத்தபடியே கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது.
'நடசேகரா' என்ற கன்னடப் படத்தில் சந்தியாவும் வித்யாவதியும் இணைந்து நடித்தார்கள். இந்த படம் 'மனோரதம்' என்ற பெயரில் தமிழில் வெளிவந்தது. வித்யாவதி, சந்தியா, ஜெயலலிதா மூவரும் இணைந்து நாடகத்தில் நடித்துள்ளனர்.
பின்னாளில் சினிமாவை விட்டு விலகிய இவர் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டிலானார். அங்கு ஒரு பள்ளியை தொடங்கினார். இப்போது அந்த பள்ளி அவரின் வாரிசுகளால் நடத்தப்பட்டு வருகிறது.