இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...?
2025ம் ஆண்டின் 10வது மாதத்தில் நுழைந்து சில நாட்கள் ஆகிறது. மாதத்தின் முதல் நாளான அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்த 'இட்லி கடை' படம் வெளியானது. 3ம் தேதி 'மரியா' படம் வெளியானது. ஏற்கெனவே இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துவிட்டது.
எஞ்சியுள்ள மாதங்களில் 50 படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிடவும் அதிகமான படங்கள் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலைமை தான் உள்ளது. இந்த வாரம் அக்டோபர் 9ம் தேதி 'அக்னி பத்து', அக்டோபர் 10ம் தேதி ''அனல் மழை, இறுதி முயற்சி, மருதம், நெடுமி, ரவாளி, தந்த்ரா, உயிர் மூச்சு, வில்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு ஓடிடி தளத்தில் நேரடியாக 'ராம்போ' படமும் வெளியாகிறது.
இதற்கு முன்பும் சில வாரங்களில் ஏழெட்டு படங்கள் வரை வெளியாகி உள்ளன. அவற்றில் ஒரு படம் கூட ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்காமல் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. வேறு எந்த மொழியிலும் இந்த அளவிற்கு வாராவாரம் படங்கள் வெளியாவதில்லை. ஆனால், தமிழில் மட்டும் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தியேட்டர்களில் அவை வரவேற்பைப் பெறுமா, பெறாதா என்பது கூடத் தெரியாமல் தரத்திலும் குறைவான படங்களை சிலர் தயாரித்து வெளியிடுகிறார்கள்.
இந்த வருடம் முன்னணி நடிகர்களின் படங்களே எதிர்பார்த்த வசூலைக் கொடுக்க தடுமாறிக் கொண்டிருக்கும் போது சிறிய நடிகர்களின் படங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது.