2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ???
2025ம் ஆண்டு ஆரம்பமாகும் போது இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளிவந்துவிடும் என்று பேசப்பட்டது. அதற்கேற்றபடி வெளிவந்தும் விட்டது. ஒரு சிலரது படங்கள் மட்டுமே வெளியாகவில்லை.
இந்த வருடத்தின் முக்கால் பாகத்தைக் கடந்துவிட்டோம். இன்னும் மூன்று மாதங்களே மிச்சமிருக்கிறது. கடந்து போன ஒன்பது மாதங்களில் தமிழ் சினிமாவில் 200 படங்கள் வெளிவந்தன. அவற்றில் அதிகபட்ச வசூலாக ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் 600 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இது அதிகாரப்பூர்வத் தகவல் அல்ல. வெளியான தகவல் தான். அதற்கடுத்து 200 கோடிக்கும் கூடுதலான வசூலுடன் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படம் இருக்கிறது. இந்த இரண்டு படங்களின் வியாபாரம், வசூல், நிகர லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவு என்றுதான் சொல்கிறார்கள். சாட்டிலைட், ஓடிடி உரிமை ஆகியவற்றால் தயாரிப்பாளர் தரப்பில் லாபம் பார்த்திருப்பார்கள் என்பதுதான் தகவல்.
வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படமாக பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளிவந்த 'டிராகன்' படம் அமைந்துள்ளது. அப்படம் 150 கோடி வரை வலித்தது. தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'குபேரா' படம் தெலுங்கில் வரவேற்பைப் பெற்று தமிழில் தோல்வியைத் தழுவியது. சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'மதராஸி' படம் 100 கோடி வசூலைக் கடந்தாலும் லாபமில்லை என்கிறார்கள். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'விடாமுயற்சி, ரெட்ரோ, தக் லைப்' படங்கள் 100 கோடி வசூலைக் கடந்தாலும் தோல்விப் படங்களாக அமைந்தன.
'டிராகன்' படம் போலவே எதிர்பாராத விதமாக ஓடி வசூலைக் குவித்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் லாபத்தைக் கொடுத்துள்ளது. விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'தலைவன் தலைவி' படமும் சுமாரான லாபம் தந்த படம் என்கிறார்கள். இந்த வருடத்தில் இதுவரையிலான தமிழ் சினிமாவின் வசூல் வேட்டை என்பது மேலே சொன்ன படங்கள்தான். கடந்த வாரம் வெளியான தனுஷ் நடித்த 'இட்லி கடை' படத்தின் நிலவரம் என்ன என்பது இந்த வாரம்தான் தெரியும்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான சில படங்கள் நல்ல லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்துள்ளன. ஆனால், இந்த வருட தமிழ் சினிமாவில் இதுவரையிலான படங்களைப் பார்த்தால் குறிப்பிடும்படியான வெற்றி என்றால் இரண்டே இரண்டு படங்கள்தான். வெளியான 200 படங்களில் 10 படங்கள்தான் குறிப்பிடத்தக்க வசூல், அதிலும் இரண்டு படங்கள்தான் லாபம் என்பது அதிர்ச்சியானது.
அடுத்தடுத்த வாரங்களில் தீபாவளி வெளியீடாக சில படங்கள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சில படங்கள் வர உள்ளன. அவற்றிலும் டாப் 10 நடிகர்களின் படங்கள் கிடையாது. அதனால், வர உள்ள படங்களை வைத்து 200 கோடி, 300 கோடி படங்கள் என வசூலை எதிர்பார்க்க முடியாது. 100 கோடி வசூலை சில படங்கள் கடக்கலாம்.
மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு தமிழ் சினிமா நிறையவே பின் தங்கி உள்ளது என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.