சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார்
கே.பி தனசேகர் இயக்கத்தில் கவுசிக், ஆரா நடிக்கும் படம் 'பூங்கா'. இந்த படத்தில் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய இரண்டு பாடல்கள் இடம் பெறுகின்றன. இது குறித்து இயக்குனர் தனசேகர் கூறியதாவது: பூங்கா என்ற தலைப்புக்கு ஏற்ப பூங்காவை மையமாக வைத்து இந்த கதை உருவாகி உள்ளது. காதல், நட்பு, காமெடி உள்ளிட்ட பல விஷயங்களை கதை பேசுகிறது. அகமது இசையில் இரண்டு பாடல்களை மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதிக்கொடுத்தார். நாங்கள் புது முக டீம் என்று பாராமல், ஈகோ பார்க்காமல் வரிகளை கொடுத்தார்.
'ஓடு ஓடு' என்ற மோட்டிவ் பாடலையும், பூங்காவை மையமாக கொண்ட இன்னொரு பாடலையும் கொடுத்தார். அந்த பூங்கா பாடல் தினசரி பூங்காவில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக சொல்லும். நான் புதுமுக இயக்குனர் என்றாலும் சில கரெக்சன் சொன்னபோது முகம் சுளிக்காமல் அதை மாற்றிக்கொடுத்தார். இந்த பாடல் ஹிட் ஆகும் என உற்சாகமும் கொடுத்தார். குறிப்பாக , சின்ன பட்ஜெட் படம் என்பதால் சம்பளம் குறைவாக வாங்கினார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படம் தள்ளிப்போய் இப்போது ரிலீஸ் ஆக உள்ளது. நான் பல ஆண்டுகளாக பூங்காவில் வாக்கிங் போகிறேன். அந்த அனுபவத்தில் இந்த கதை எழுதினேன். சென்னை டைரக்டர் காலனி பூங்காவில் படப்பிடிப்பு நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.