300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ?
மூன்று படங்கள் அடுத்தடுத்து 300 கோடி வசூலைக் கடந்தது என்ற செய்தியை நேற்று பார்த்தோம். மலையாளத்தில் வெளிவந்த 'லோகா சாப்டர் 1', தெலுங்கில் வெளிவந்த 'ஓஜி', கன்னடத்தில் வெளிவந்த 'காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்கள் கடந்த வார இறுதி வசூலில் 300 கோடி வசூலைக் கடந்தன. அவ்வளவு வசூலைக் கடந்த படங்கள் எவ்வளவு லாபத்தைப் பார்த்தன என்பது குறித்த ஒரு கணக்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியாகி உள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளியான மலையாளப் படமான 'லோகா சாப்டர் 1' படம் சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான ஒரு படம். தியேட்டர் வியாபாரம் சுமார் 25 கோடிக்கு நடந்துள்ளது. உலக அளவில் இப்படம் 300 கோடி வசூலைக் கடந்தது. அதில் பங்குத் தொகையாக சுமார் 130 கோடி கிடைத்துள்ளது. அதில் லாபம் மட்டும் 102 கோடி. பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபம் கொடுத்துள்ள ஒரு படம்.
பவன் கல்யாண் நடித்து வெளியான தெலுங்குப் படமான 'ஓஜி' படம் சுமார் 200 கோடிக்கும் சற்றே கூடுதல் பட்ஜெட்டில் தயாரான ஒரு படம். படத்தின் தியேட்டர் வியாபாரம் சுமார் 172 கோடி. இதுவரையிலான வசூல் 300 கோடி. அதில் பிரேக் ஈவன் ஆவதற்குரிய தொகையான 175 கோடி வந்துள்ளது. இனிமேல் ஆகும் வசூல்தான் படத்தின் லாபக் கணக்கில் சேரும். 300 கோடி வசூலித்தாலும் படத்தின் தியேட்டர் வியாபாரம் அதிகத் தொகையில் விற்ற காரணத்தால் லாபத்தை அதிகம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படம் நான்கு நாட்களில் 335 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படம் சுமார் 125 கோடி பட்ஜெட்டில் தயாரனதாகச் சொல்லப்படுகிறது. படத்தின் தியேட்டர் வியாபாரம் தெலுங்கில் 90 கோடிக்கும், தமிழில் 40 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதர மொழிகளிலும் அதிகமான அளவில்தான் வியாபாரம் நடந்துள்ளது. சுமார் 350 கோடி முதல் 400 கோடி வரை தியேட்டர் வியாபாரம் நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதற்கான வசூலைப் பெற 600 கோடி வசூலைக் கடக்க வேண்டும் என்கிறார்கள். முழு வியாபார நிலவரம் இன்னும் வெளியாகவில்லை. எதிர்வரும் நாட்களில் இப்படம் அதிகமாக வசூலித்தாக வேண்டும். அதைப் பொறுத்தே லாபம் அமையும் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.