உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில்

நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில்


என்றும் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுவதற்கு தகுதியான நபராக இப்போது வரை இளமை துள்ளலுடன் வளம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. அவரது நடிப்பில் இந்த வருடம் ‛குபேரா, கூலி' என இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது நூறாவது படம் தற்காலிகமாக ‛கிங் 100' என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. நித்தம் ஒரு வானம், ஆகாசம் போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‛லாட்டரி கிங்' என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி, தெலுங்கு திரையுலகில் பரவி வருகிறது. அதுமட்டுமல்ல நாகார்ஜுனாவின் நூறாவது படம் என்பதால் இதில் அவரது மகன்களான நாகசைதன்யா மற்றும் அகில் இருவரும் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛மனம்' என்கிற படத்தில் நாகார்ஜுனா அவரது தந்தை நாகேஸ்வர ராவ், மகன் நாகசைதன்யா மூவரும் இணைந்து நடித்திருந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் ஒரு படத்தில் நடித்திருப்பது சினிமா வரலாற்றில் முக்கிய பதிவாகவும் மாறி உள்ளது. அதேபோல தனது நூறாவது படத்தில் தனது இரண்டு மகன்களும் இடம் பெற வேண்டும் என நாகார்ஜுனா விரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !