பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்'
ஹிந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான் நடித்த ஷோலே படம் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தாக்கத்தில் பல படங்களும் உருவானது. ஆர்.கே.செல்வமணி இயக்கிய 'கேப்டன் பிரபாகரன்' படம் ஷோலே படத்தின் தாக்கத்தில் உருவானதுதான். அதேபோன்ற இன்னொரு படம் 'முரட்டுக் கரங்கள்'.
ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் தியாகராஜன், ஜெய்சங்கர், சத்யராஜ், ரவிச்சந்திரன், பானு சந்தர், சிவச்சந்திரன், சுலக்ஷனா நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
தங்கள் கிராமத்தை அழித்த கொள்கைக்காரர்களை அந்த கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் குதிரை வீரர்களாக மாறி அந்த கூட்டத்தை அழிப்பதுதான் படத்தின் கதை. படம் முழுக்க குதிரைகளில் ஓட்டம், துப்பாக்கி சூடு, இடையில் கவர்ச்சி பாடல்கள், சில காதல் காட்சிகள் என பக்கா கமர்சியல் படமாக உருவானது.
ஆனால் பழிவாங்கல் என்பதை கதை வலுவாக இல்லாததால் படம் தோல்வி அடைந்தது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் வி.ரங்காவின் உழைப்பு மட்டும் பேசப்பட்டது.