உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி”

பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி”


நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், நடனக் கலைஞர், ஒப்பனையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி என்ற பன்முகத் தன்மையோடு பல காலமாக கலையுலகில் பயணித்து வருபவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இனி ஏதும் இல்லை எனும் அளவிற்கு இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

சப்பாணியாக, குள்ளனாக, பெண்ணாக, கொடூர கொலைகார மனநோயாளியாக, ஊமையனாக, குருடனாக, கிராமத்தானாக, நவநாகரீக இளைஞனாக, போராளியாக, நகைச்சுவை நாயகனாக என இவர் ஒப்பனை செய்து நடிக்காத வேடங்களே இல்லை. அப்படி ஒரு வித்தியாசமான வேடமேற்று நடிகர் கமல்ஹாசன் தோன்றி நடித்த ஒரு வெற்றித் திரைப்படம்தான் “தெனாலி”.

1990களின் பிற்பகுதியில் நடிகர் கமல்ஹாசனின் கனவுத் திரைப்படமான “மருதநாயகம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி, படம் வளர்ந்து வந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்தப் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுவிட, நடிகர் ரஜினியை வைத்து “படையப்பா” என்ற ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படத்தை தந்திருந்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம், தான் ஒரே வருடத்தில் இரண்டு படங்களில் நடிக்கப் போவதாகவும், அதில் ஒன்றை தானே தயாரித்து இயக்கப் போவதாகவும் மற்றொன்றை தாங்கள் இயக்கித் தர வேண்டும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொள்ள, அவ்வாறு உருவான திரைப்படம்தான் இந்த “தெனாலி” திரைப்படம்.

படத்தை இயக்க சம்மதம் தெரிவித்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரே அந்தப் படத்தை தனது “ஆர் கே செல்லுலாய்ட்ஸ்” என்ற பதாகையின் கீழ், முதன் முதலாக தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் உயர்வு பெற்றிருந்தார். “வாட் அபவுட் பாப்?” என்ற ஆங்கில திரைப்படத்தின் ஈர்ப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு “தெனாலி” என்ற பெயரை பரிந்துரைத்தது, ரஜினிகாந்த்.

படத்தின் வசனங்களை கிரேஸி மோகன் எழுத, இலங்கைத் தமிழ் பேச்சுவழக்குகள் தொடர்பான உரையாடல்களை எழுதுவதில் இலங்கையைச் சேர்ந்தவரும், பிரபல வர்ணனையாளருமான பி எச் அப்துல் ஹமீதின் பங்கு அளப்பரியது. படத்தில் நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை ஜோதிகா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரங்களுக்கு படக்குழுவினரால் முதலில் பரிசீலிக்கப்பட்டிருந்த நடிகர்கள் மோகன்லால் மற்றும் சிம்ரன்.

வைரமுத்துவை தவிர்த்து, முதல் முறையாக பிறைசூடன், பா விஜய், அறிவுமதி, தாமரை, இளையகம்பன், கலைக்குமார் போன்ற கவிஞர்களுடன் இணைந்து இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றிய இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தன. யாழ்பாண பேச்சு வழக்கில் உருவான “இஞ்சிருங்கோ” என்ற பாடலை எழுதிய கவிஞர் தாமரை சிறந்த பாடலாசிரியருக்கான “தமிழ்நாடு அரசு சினிமா விருது” கிடைக்கப் பெற்றிருந்தார்.

2000ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளியான இத்திரைப்படம், தமிழகத்தில் 175 நாள்களுக்கும் மேல் ஓடி, வெள்ளிவிழா கண்டதோடு, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சிறந்த வரவேற்பைப் பெற்று, அங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செயதிருந்தது, இத்தனைச் சிறப்புக்குரிய இத்திரைப்படம், தற்போது தனது வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில், நிறைவான நினைவுகளை சுமந்த வண்ணம், நித்தம் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிழலாய் இன்னும் பயணித்துக் கொண்டுதானிருக்கின்றான் இந்த “தெனாலி”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !