உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர்

வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர்


இசை... இசைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. பல்வேறு இந்திய மொழிகளில் சினிமா, ஆல்பங்கள் மூலம் இசைப்பிரியர்களின் மனதுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் பின்னணி, கர்நாடகா இசை பாடகி மது ஐயர்.

ஐந்து வயதில் பாடத் துவங்கி உலகம் முழுதும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதுடன், இசைக்காக தனி யு டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இசை வீடியோக்களை வெளியிட்டு கர்நாடக இசையையும் கற்று தந்து வருகிறார். இவரது பாடல்களை கவுரவிக்கும் வகையில் மெட்ராஸ் இசை அகாடமி 'சங்கீத வித்வத் பூஷணா' என்ற மதிப்புமிக்க பட்டத்தை வழங்கியது. ஜெயதாரிணி அறக்கட்டளையின் இளம் சாதனையாளர்களுக்கான ஜெயமாலிகா விருது, நாரத கான சபையால் மகாராஜபுரம் சந்தானம் விருது, சூப்பர் சிங்கர் 3 விருது என இவருக்கு பெருமை சேர்த்த விருதுகளை பட்டியலிடலாம்.

இனி மதுஐயர் தொடர்கிறார்...

ஐந்து வயதில் இசைப் பயணம், கீ போர்டு வாசிப்பதில் தான் துவங்கியது. பிறகு எப்படி பாடத் துவங்கினேன் என்பது இன்னமும் வியப்பு. சிறு வயதில் முதல் மேடைநிகழ்ச்சியில் கீ போர்டு வாசித்தேன். பிறகு சூப்பர் சிங்கர் விருது பெற்றதிலிருந்து முழுநேர பாடகியாகி விட்டேன். முதல் முறையாக சவுதி அரேபியாவில் நடந்த நிகழ்ச்சியில் 1990 காலக்கட்டத்தில் வெளியான ஹிந்தி பாடல்களை கீ போர்டில் வாசிக்க, கூட்டத்தில் ஆர்ப்பரிப்பு. இளையராஜாவுடன் உலகம் முழுதும் செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அவர் இசையில் பாடியது கடவுள் அளித்த வரம்.

இளையராஜா, ரஹ்மான் இசையோடு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு உள்ளிட்ட கர்நாடக இசையையும் கேட்பேன். என் முதல் சினிமா பாடல் வாய்ப்பு அமைந்த விதத்தை எளிதில் மறக்க முடியாது. மாலைநேரக் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வந்த போது ரிக்கார்டிங் இருக்கிறது வர முடியுமா என ஒரு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்ற போது தான் ஜிப்ரான் இசையில் சினிமாவில் பாடப் போகிறோம் என்பது தெரிந்தது. ஆனால் அன்று களைப்பில் இருந்ததால் அவர் எதிர்பார்த்தளவு சிறப்பாக கொடுக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நாளைக்கு 'பிரஷ் ஆக' வரும்படி ஜிப்ரான் சொல்லி அனுப்பினார். மறுநாள் படத்தின் இயக்குனர் முன்னிலையில் நான் பாடியதை கேட்டு, ஜிப்ரான் உற்சாகப்படுத்தினார். அப்படி அமைந்தது தான் 'அமரகாவியம்' படத்தில் பாடிய 'தேவதேவதை... பாடல்.

பிறகு 'கழகத்தலைவன்' படத்தில் 'நீளாதே...' என்ற பாடல் பாடினேன். பெரும்பாலான ரசிகர்களிடம் என்னை கொண்டு போய் சேர்த்தது 'பேரன்பு' படத்தில் பாடிய 'செத்து போனது மனசு...' தான். அது ரசிகர்களின் மனசை கட்டிபோட்டது! வயதான ஒருவரிடமிருந்து சமீபத்தில் இ-மெயில் வந்தது. அந்த முதியவர் டயலாசிஸ் செய்து கொண்டு வருபவராம். அந்த சிகிச்சை எடுக்கும் போது ரண வேதனையாக இருக்கும் நேரத்தில், என் பாடல்களை சேனலில் கேட்கும் போது அந்த வலி தெரியாது எனக் குறிப்பிட்டிருந்தார். வாடிய மனசை பாட்டால் வருடி வலி போக்கியது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன். தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை என்றாலும் சென்னையில் கொண்டாடத்தான் பிடிக்கும்.

சிறிய வயதில் தீபாவளி என்றாலே பட்டாசு நினைவுக்கு வரும். ஆனால் தற்போது 'சட்டென' நினைவுக்கு வருவது ஸ்வீட் வகைகள் தான். விதவிதமான இனிப்புகளை ருசிப்பேன். வானில் சென்று வெடிக்கும் மத்தாப்புகளை வெடிப்பது பிடிக்கும். இந்த மாதிரி பண்டிகை காலங்களில், ரசிகர்களுக்கு நன்றி என சொல்வதை தவிர வேறு எதுவும் இல்லை. ரிக்கார்டிங் இன்றி கோவிட் நேரங்களில் வீட்டில் முடங்கியிருந்த நேரத்தில் சேனல் துவங்கி, பாடல்களை பாடி வெளியிட்டேன். அது இந்தளவுக்கு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என எதிர்பார்க்கவில்லை. ஒரு பாடகியாக எந்த பாட்டு பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளிப்பது கஷ்டம். எல்லா பாடல்களையும் கேட்டு கொண்டே இருப்பேன். 'நீங்களும் கேளுங்கள்' என்றவர் தீபாவளிக்கு தயாராக வேண்டும் என்றவாறு விடைபெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !