கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம்
பாவனை விஞ்ஞான கதைகள், இஸ்லாமிய நீதிக் கதைகள், கிரைம் நாவல்கள், சமூக கதைகள் என எழுதும் கதைகளில் வித்தியாசம் காட்டுபவர் எழுத்தாளர் ஆர்னிகா நாசர். கதைகளில் பாவனை செய்பவர் எனினும் பாவனையற்ற பேச்சிற்கு சொந்தக்காரர். இவரிடம் உரையாடியபோது..
வாசிப்பில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி
மதுரை கோரிப்பாளையத்தில் பிறந்தேன். 5ம் வகுப்பு வரை தமிழ் தெரியாது. 6ம் வகுப்பில் திண்டுக்கல்லுக்கு சென்ற பிறகு, அப்பா அறிமுகப்படுத்திய அங்குள்ள நுாலகத்தில் எடுக்கும் நுாலை மாலைக்குள் வாசித்து திருப்பி தந்து விடுவேன். நுாலகர் என்னிடம், ஏன் என்ன ஆயிற்று? நுால் பிடிக்கவில்லையா?' என்பார்; 'இல்லை படித்து விட்டேன்' என்ற என்னிடம் அவர் நம்பாமல் கேள்வி கேட்க நான் சரியாக பதிலளித்ததை அடுத்து நீ பெரிய இடத்திற்கு செல்வாய் என வாழ்த்தினார். வாண்டுமாமா, சுஜாதா, தமிழ்வாணன் கதைகளை படித்து கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருப்பேன்; நான் பார்த்த திரைப்படங்களை நண்பர்களுக்கு, என் கற்பனையோடு சேர்த்து சொல்லுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அந்த கற்பனையே இன்றும் கதை எழுத கை கொடுக்கிறது.
உங்களை எழுத்தாளனாக உணர்ந்த தருணம்
கல்லுாரி இறுதியாண்டு படிக்கும்போது 'ஆர்னிகா' என்ற கையெழுத்து பிரதியை நடத்தினேன். நானே கைப்பட வரைந்தும், எழுதியும் விலை நிர்ணயித்து 15 பிரதிகளை விற்று விட்டு தான் வீடு திரும்புவேன். பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலில் என் கதைகளை இதழ்களுக்கு அனுப்பினேன். ஒரு நாள் தினமலர் வாரமலர் அந்துமணியிடம் இருந்து, சென்னை வந்து சந்திக்கும்படி கடிதம் வந்தது. அவரை சந்தித்த பின், என் முதல் தொடர்கதை 'குற்றாலக் கொலை சீசன்' வாரமலரில் வெளியாகி. அப்போது தான் எனக்கே என் மேல் நம்பிக்கை வந்தது.
உங்களின் கதைகள் தனித்து தெரிவதன் ரகசியம்
என் கதைகள் வரத்துவங்கிய கால கட்டம் ராஜேஷ்குமார், சுஜாதா, பாலகுமாரன் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். நான் முடிந்தளவு பிறருடைய பாதைகளில் பயணிப்பதை தவிர்த்தேன். என் கேரக்டர்களுக்கு இதுவரை பயன்படுத்தாத பெயர்களையே பயன் படுத்தி, இரண்டு கேரக்டர்களுக்கு இடையேயான உரையாடலின் வழியே கதையை நகர்த்துமாறு அமைப்பேன்; இதற்காகவே ஆயிரத்திற்கும் மேற்பட்டபெயர்ப்பட்டியல் தயாரித்து குறித்து வைத்துள்ளேன். தினமும் 6 மணி நேரம் எழுதுகிறேன்.
கிரைம் நாவல்கள் வெறும் பொழுதுபோக்கு காகிதங்கள் என விமர்சனம் உள்ளதே...
கிரைம் நாவல்கள் 'லைட்' ரீடிங்கிற்கானது. கிரைம் கதை எழுதுவதற்கு மனதளவில் கடுமையாக போராட வேண்டியிருக்கும். வாசகனுடன் எழுத்தாளன் 'மைண்ட் கேம்' ஆடி கடைசி வரை கொண்டுபோகும் கலை எல்லாருக்கும் வந்து விடாது.
இன்றைய தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா
நிச்சயம் இல்லை. இயக்குனர்களே கதை, திரைக்கதை, வசனம் என எல்லாமே தன் பெயரில் வர வேண்டும் என நினைக்கிறார்கள். மலையாள சினிமாவில், கதையின் உரிமம் பெற 2 ஆண்டுகள் காத்திருந்து வாங்கிச்செல்கின்றனர். தமிழ் சினிமாவில் ரூ.50 ஆயிரம் வரை 'குடிக்க' செலவழிப்பார்கள்; ஆனால் எழுத்தாளனுக்கு ரூ.10 ஆயிரம் கூட தர யோசிப்பார்கள். இயக்குனர்கள், தங்களிடமுள்ள கதை காலியானவுடன் 'யூனிவர்ஸ்' என்ற பெயரில் அரைத்த மாவையே அரைக்கிறார்கள். கதை திருடியும் மாட்டிக்கொள்கிறார்கள்.
கதைகளில் லாஜிக் எந்தளவு முக்கியம்
கதைகளின் தன்மைகளுக்கு ஏற்ப லாஜிக் மாறுபடும். சமூக கதைகளில் உள்ள லாஜிக்கை சரித்திரப் புனைவு கதைகளில் எதிர்பார்க்க முடியாது. துாங்குபவர்களை எழுப்புவது தான் எழுத்தின் வேலை; மற்றபடி 'எழுத்து புரட்சி செய்யும்' என்பதெல்லாம் டூ மச்..!
தமிழில் சிறுவர் இலக்கியங்கள் குறைந்து விட்டனவே
90 கால கட்டத்தில் சிறுவர் இதழ்கள், காமிக்ஸ்கள் நிறைய வெளியாகும்; சிறுவர்களுக்கு கற்பனை திறன் வளர்க்கவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் சொல்லிக் கொடுத்தன. ஆனால் இன்று சிறுவர் இலக்கியம் சுருங்கி விட்டது.
வாழ்வின் மறக்க முடியாதவர்கள் பற்றி
முக்கியமானவர்களாக என் மனைவியையும், அந்துமணியையும் நினைக்கிறேன். ஆர்னிகா நாசர் என்றாலே 'தினமலர் எழுத்தாளர்' என பெயர் வர அந்துமணி காரணம்.
இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது
சக எழுத்தாளர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு வட்டம், 'லாபி'யாக மாற அனுமதிக்கக் கூடாது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், மன்னிப்பு கேட்கும் தைரியமும் அவசியம். எழுத்தாளனுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியம். இவ்வாறு தெரிவித்தார்.