உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தி பட இயக்குநர் வீட்டில் துப்பாக்கி சூடு : 5 பேர் கைது

ஹிந்தி பட இயக்குநர் வீட்டில் துப்பாக்கி சூடு : 5 பேர் கைது

மும்பை : மும்பையில் உள்ள பிரபல ஹிந்தி பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீடு மீது, மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் தொடர்புடைய 5 பேர் கைதாகி உள்ளனர்.

பிரபல ஹிந்தி சினிமா இயக்குநர் ரோஹித் ஷெட்டி; சிங்கம், கோல்மால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தை இயக்கினார். மஹாராஷ்டிராவின் மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள இவரது வீட்டின் மீது, நேற்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர். அப்போது, இயக்குநர் ஷெட்டி வீட்டில் இருந்தாரா என தெரியவில்லை.

எனினும் துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். மேலும், அருகே பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதனிடையே இந்த துப்பாக்கி சூட்டிற்கு லாரன்ஸ் பிஷ்னாயி கேங் பொறுப்பேற்றுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆனந்த் மராத்தே, ஆதித்யா கெய்னேஸ்வர் சித்தார்த் தீபக், சாம்ராட் ஷிவ்சரண், ஸ்வப்னில் பந்து ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !