உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா

சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா


'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லையாக நடித்து பாராட்டை பெற்றவர் லாவண்யா. மாடர்ன் மயிலாக, சூப்பர் குயினாக வலம் வரும் இவர் வடமாநிலத்து பெண்ணோ என ஆச்சரியப்படும் போது 'நான் திருப்பூர் பெண் தான்' என கில்லியாக சொல்லி அடிக்கிறார். இவரோடு பேசிய போது...

மாடலிங் ஆர்வம் எப்போது வந்தது

சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு. ஆனால் எப்படி, யாரிடம் கேட்க என தெரியவில்லை. வங்கியில் பணிபுரிந்து கொண்டு நான் மாடலிங் ஆர்வத்தை விட்டாலும், அது என்னை விடவில்லை. கல்லுாரியில் படிக்கும் போதே எனது மேற்படிப்புக்காக பணம் சேமித்தேன். இதற்காக பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். அப்பணத்தை கொண்டு தான் வங்கி வேலைக்கு படித்தேன். அம்மா புடவை விற்பனை செய்வார். அவருக்கு உதவியாக இருந்தேன். நானே சேலையை அணிந்து புகைப்படம் எடுத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவேன். இதை பார்த்த பலர் நீங்கள் ஏன் மாடலிங் போக கூடாது என்றனர்.

'குயின் ஆப் மெட்ராஸ்' போட்டியில் பங்கேற்றேன். போட்டியாளராக இருப்பேன் என நினைத்தேன் ஆனால் பட்டம் வென்றது என்னால் நம்ப முடியவில்லை. 2020ல் 'மிஸ் தமிழ்நாட்டில்' 2வது ரன்னர் அப், மிஸ் சவுத் இந்தியாவில் 'மிஸ் போட்டோஜெனிக்' டைட்டில்கள் பெற்றேன். 'மிஸ் இந்தியா'விற்கும் தேர்வாகினேன்.

வீடுகளில் 'முல்லை' பூத்தது எப்படி

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தது, ஒவ்வொரு வீட்டிலும் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகவே மாற்றியது மனதை நெகிழச் செய்தது. அடுத்தடுத்து 3 படங்கள், 2 சீரியல்கள், குறும்படங்கள் நடித்துள்ளேன். 'வேற மாறி ஆபீஸ்' எனும் வெப் சீரிஸில் நடித்தேன். தற்போது 'வேடுவன்' வெப் சீரிஸ் நடித்து வருகிறேன். ஹீரோயின் ஆக பேசிக் கொண்டிருக்கிறேன். புதிய வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசை. சிறு வயதில் தேர்வு எழுத செல்லும் போது இந்த கேள்வி வர வாய்ப்புண்டு என என் உள்ளுணர்வு கூறும். அது அப்படியே வந்து விடும். அதே போன்று தான் இந்த விருப்பமும் நிறைவேறும் என நம்புகிறேன்.

நடிக்க வர விரும்பும் இளம்பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது

பெற்றோரை கஷ்டப்படுத்தாமல், பேசி புரிய வைக்க வேண்டும். கண்டிப்பாக ஒத்துக் கொள்வர். உங்கள் நடிப்பு வாழ்க்கையின் தனித்துவத்தை புரிய வையுங்கள். சாதித்து காட்டினால் பெற்றோர் புரிந்துக் கொள்வர். நல்ல நட்பு வட்டத்தை வைத்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !