தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம்
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறையவே இருக்கிறார்கள். தயாரிப்பாளரின் மகன், இயக்குனரின் மகன், நடிகரின் மகன் என அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தாலும், அதில் எத்தனை பேர் வெற்றிகரமாக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வியே.
நடிகரின் மகன் என்ற வாரிசாக நடிகர் விக்ரம் மகன் துருவ், நாயகனாக அறிமுகமாக 'வர்மா' படத்தை அறிவித்தார்கள். விக்ரமுக்கு திருப்புமுனை தந்த 'சேது' படத்தை இயக்கிய பாலா அப்படத்தை இயக்கினார். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்தான் அந்தப் படம். ஆனால், படம் முடிந்த பின் 'ஒரிஜனல்' படம் போல இல்லை என விக்ரம், பாலா இருவருக்கும் இடையே மோதல் வந்தது. அதனால், அந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டார்கள்.
பின்னர், 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் அந்தப் படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார்கள். ஆரம்பமே குழப்பம் என்பதால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பின்னர் அப்பா விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'மகான்' படத்தில் நடித்தார் துருவ். ஓடிடியில் நேரடியாக வெளியான அந்தப் படம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் தனது முதல் படம் 'பைசன்' தான் என துருவ் விக்ரம் பேசினார். அது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது. 'ஆதித்ய வர்மா' படம் ஒரு ரீமேக் படம். 'மகான்' படத்தில் அப்பா தான் கதாநாயகன். 'பைசன்' தான் நான் தனி கதாநாயகனாய் நடிக்கும் படம் என்று விளக்கம் கொடுத்தார்.
தற்போது 'பைசன்' படம் 40 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படியும் 50 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனி கதாநாயகனாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் துருவ் விக்ரம்.