உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை

கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை

கடந்த அக்டோபர் நான்காம் தேதி கர்நாடகாவில் உள்ள வியட்டராயனபுரா என்கிற பகுதியில் 3 பேர் பயணித்த இரு சக்கர வாகனத்தின் மீது அந்த வழியாக சென்ற கார் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் நிற்காமல் விரைந்து சென்றது. அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிய கிரண் மற்றும் அவருடன் பயணித்த அனுஷா மற்றும் அனிதா என மூவரும் படுகாயம் அடைந்தனர். இதில் அனிதாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டது.

விபத்து நடந்த மூன்று நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் கிரண் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை கண்காணித்தனர். அதில் அந்த கார் கன்னட நடிகை திவ்யா சுரேஷுக்கு சொந்தமானது என்றும் சம்பவம் நடந்த சமயத்தில் அவர்தான் அந்த காரை ஓட்டிச் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் திவ்யா சுரேஷ். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இத்தனை நாட்களாக அமைதி காத்து வந்த திவ்யா சுரேஷ் தற்போது இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “பைக்கில் வந்தவர்கள் மீதுதான் தவறு இருக்கிறது. மூன்று பேர் பைக்கில் பயணித்தது, அது மட்டுமல்ல அவர்களில் ஒருவர் கூட ஹெல்மெட் அணிந்திருக்காததும் விதி மீறிய செயல். கார் டிரைவர் இடதுபுறமாக திரும்பிய போது பைக்கை ஓட்டியவர்கள் தாங்களாகவே கார் மீது மோதி விபத்தில் சிக்கினார்கள். ஆனால் கார் ஓட்டியவர்கள் மீது குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது.

முதலில் அந்த வீடியோவை நன்றாக பாருங்கள்.. இல்லை உங்கள் கண்களை பரிசோதியுங்கள்.. ஒருவர் நடிகராக இருப்பதாலேயே காரணம் இல்லாமல் அவர் மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டி விட முடியாது. உண்மை மட்டுமே வெல்லும்” என்று கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள பதிவில் கார் ஓட்டுநர் இடது புறமாக திருப்பியபோது என்று கூறியதால் தான் காரை ஓட்டவில்லை என்பதை பதிவு செய்ய முயற்சிக்கிறார் என்றும் யார் மீது தவறு இருந்தாலும் கூட விபத்து நடந்த பின் அங்கே காரை நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதுதானே மனிதாபிமானம்.. அதை விடுத்து இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தபின் இப்போது தன் பக்கம் நியாயம் இருப்பது போல் இப்படி விளக்கம் அளிப்பது தவறானது என்றும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !