மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ்
'ராட்சசி திரைப்படத்தில் தலைமையாசிரியை ஜோதிகாவின் சிறு வயது மாணவ காதலனாக அறிமுகமாகி டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் 'மலையூரு நாட்டாமை, மனச காட்டு பூட்டாம' பாடலில் தனது நடனத்தால் மக்களை கவர்ந்த கமலேஷ் தினமலர் வாசகர்களுக்காக நம்முடன் பகிர்ந்தது...
பிறந்து வளர்ந்தது சென்னை. தந்தை ஜெகன் நடனக்கலைஞர், மேடை பாடகர் என்பதால் மூன்றரை வயதில் இருந்து அவரது இசை நிகழ்ச்சிகளை பார்க்க அழைத்து செல்வார். அவர் பாடும் பாடலுக்கு ஏற்ப நான் வாய் அசைப்பதை கவனித்தவர், அவருடன் மேடையில் பாட வைத்தார்.
'என் மைமா பேருதாண்டா அஞ்சல' என்ற கானா பாடலை எழுதி என்னை பாட வைத்து முகநுாலில் பதிவிட்டார். இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தனர்.
கர்நாடக இசை நிகழ்ச்சி சரியாக வருமா என்ற சந்தேகத்தில் தந்தை வேண்டாம் என்றார். ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பில் வென்றதும் தந்தை ஆச்சரியத்தில் மூழ்கினார். நிகழ்ச்சியில் கானா வினோத் எழுதி கொடுக்கும் பாடல்களை 'மெட்டு கட்டி' பிரமாதமாக பாடியதால் நடிகை நயன்தாரா, நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பலரும் 'மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது' என பாராட்டினர்.
ராட்சசி திரைப்படத்திற்கு பின் தொடர்ந்து படங்கள் கிடைத்தன. எனது 23வது படமாக 'டூரிஸ்ட் பேமிலி'யில் சசிகுமார், சிம்ரனின் 2வது மகனாக நடித்தேன். ஷூட்டிங் துவங்கும் போதே, 'கதையை நகர்த்தி செல்லும் முக்கியமான கதாபாத்திரம் உனக்கு, நீ தான் ஹீரோ' என என்னிடம் இயக்குனர் தெரிவித்தார்.
இப்படத்தில் இலங்கையில் இருந்து திடீரென தமிழகம் வந்ததால் அண்ணனின் காதலிக்கு திருமணம் நடந்திருக்கும். அண்ணனின் மனவருத்தத்தை போக்க காதலி திருமணத்தில், மம்பட்டியான் திரைப்படத்தின் 'மலையூரு நாட்டாமை, மனச காட்டு பூட்டாம' பாடலுக்கு நான் ஆடிய நடனமும், டூரிஸ்ட் பேமிலி படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இரு வாரங்களுக்கு முன்பு சென்னையின் தனியார் கல்லுாரி நிகழ்ச்சிக்கு சென்ற போது இப்பாடலை போட்டு வரவேற்றனர். இதே போன்ற நடனத்தை அமெரிக்காவில் புதுமண தம்பதி தங்களது திருமணத்தில் நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு என்னை 'டேக்' செய்தனர்.
பள்ளி பருவம் தவறி விடக்கூடாது என்பதால் தந்தை உதவியுடன் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். தேர்வு நேரங்களில் நடிப்பதில்லை. 6 ஆண்டுகளாக கர்நாடக இசையை கற்கிறேன். இசை, நடனம், நடிப்பு ஆகிய மூன்றையும் தொடர்ந்து கற்றுக்கொண்டுள்ளேன்.
விரைவில் எனது 5 படங்கள் வெளியாகவுள்ளது. அதற்கு பிறகு இன்னும் 'வேற லெவலில்' போயிருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட், கபடி, கால்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகம். உடல் எடை அதிகரித்து இருப்பதால் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.