உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுபமாவின் அனுபவம்

அனுபமாவின் அனுபவம்


சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அதில் பாக்கியம் கேரக்டரில் நடித்த அனுபமாவையும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கேரக்டரில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது, கொல்கட்டா கிரவுன் விருது, நார்வே தமிழ் பிலிம் விருது போன்றவை இவரை கவுரவப்படுத்தின.

தந்தை பிரகாஷ்குமார் ஏர்போர்ஸ் அதிகாரியாக இருந்தவர். கணவர் சிவக்குமாரும் ராணுவத்தில் அதிகாரியாக இருப்பவர். இப்படி ராணுவ குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்த அனுபமா தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்கள், வெப் சீரியல்களில் படுபிஸியாக இருக்கிறார். டிவி ஆங்கர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், மாடல், நடிகை, விஷுவலைசர், சினிமா தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அனுபமா பேசியதிலிருந்து...

கோவை சொந்த ஊருங்க. ஆனால் அப்பா ஏர்போர்ஸ் அதிகாரி என்பதால் டில்லி, பெங்களூரு, மும்பை, சண்டிகர் என வடமாநிலங்களில் பெரும்பாலான ஆண்டுகள் கழிந்தன. பெங்களூரு, டில்லியில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்தேன். கணவர் சிவக்குமாரோடு வடமாநிலங்களிலேயே இருந்ததால் ஆங்கிலம், ஹிந்தியும் அத்துப்படி.

சிறு வயதிலேயே நிறைய சினிமாக்கள் பார்ப்பேன். இதனால் இயல்பாகவே நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சினிமாவிற்குள் எப்படி செல்வது எனத் தெரியவில்லை. அப்பா, அதற்கு பிறகு கணவர் என ராணுவத்துறையில் இருந்ததால் வடமாநிலங்களில் பல நகரங்களுக்கு குடிபெயர வேண்டியும் இருந்தது.

டில்லியில் படித்து கொண்டிருந்த போதே 'டிவி'யில் ஆங்கரிங் வாய்ப்பு வந்தது. அப்படி தான் 'டிவி'யில் நுழைந்தேன். 13 ஆண்டுகள் படித்து கொண்டும் பிறகு திருமணமாகியும் 'டிவி'யில் ஆங்கரிங், நிகழ்ச்சி தயாரிப்பாளர் உள்ளிட்ட பல பிரிவுகளில் பணிபுரிந்த நிலையில் மாடலிங் வாய்ப்பு வந்தது. ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளேன். அதை வைத்து ஹிந்தி வெப்சீரியல், சினிமாவிலும் நடிக்க துவங்கினேன்.

இயக்குனர் சேரனின் பொக்கிஷம் படம் மூலம் தமிழுக்கு வந்தேன். பிறகு வம்சம் படம் வாய்ப்பு வந்தது. அய்யனார், ஆடுபுலி, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. முப்பொழுதும் கற்பனைகள் படத்தில் நடித்தற்காக சிறந்த துணை நடிகைக்கான தனியார் டிவி விருது கிடைத்தது. அதன் பிறகு ஐம்பது படங்கள் வரை சென்று விட்டது.

உண்மையில் வம்சம் பட வாய்ப்பு வந்த போது தமிழ் அவ்வளவாக வரவில்லை. இயக்குனர் பாண்டிராஜ் அதில் கிராமங்களை அழகாக காட்டியிருந்ததால் அப்பகுதிகளுக்கு சென்று உரையாடியதன் மூலம் தமிழில் நன்றாக பேச, கேட்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். மூடர்கூடத்தில் என் அப்பாவுடனேயே இணைந்து நடித்ததை மறக்க முடியாது. கன்னடத்தில் ஒன்று, தெலுங்கில் இரண்டு, தமிழில் இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன்.

இதுவரை கிடைத்த அனுபவங்களை கொண்டு ஒரு படத்தை தயாரித்தும் வருகிறேன். மக்களை கவரும் வகையில் அந்த படம் இருக்கும். இந்தளவு படங்களில் பிஸியாக இருப்பதற்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முக்கிய காரணம். படப்பிடிப்பு நாட்களில் குடும்பத்தினர் எழுந்திருப்பதற்கு முன் சென்று விடுவேன். அவர்கள் துாங்கிய பிறகு தான் வீட்டிற்கு திரும்புவேன். என் சூழ்நிலையை புரிந்து கொண்டு அப்பா, அம்மா, கணவர், தற்போது மகன் ஆதித்திய சிவக்குமார் ஆதரவாக இருக்கின்றனர்.

என்னை பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்தில் யாரும் சாதிக்க எந்த தடையும் கிடையாது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி திறமையை வெளிகாட்டினாலே போதும். நீங்களும் சாதிக்கலாம்... எந்த துறையிலும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !