உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி

59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி


மலையாளக் கரையோரம் பிறந்து, கொஞ்சும் தமிழ்ப் பேச்சு, நடிப்பால் கேரளா, தமிழகத்தின் இளசுகளை கவர்ந்து வரும் இளம் நாயகி. அழகியலின் அத்தனை அம்சங்களையும் கொண்ட தேவ மங்கை, நடிகை ஸ்வாதி அளித்த பேட்டி...

கேரள மாநிலம் ஆலப்புழா நுார்நாடு சொந்த ஊர். அப்பா ஷாஜி, ஓட்டல் ஷெப். அம்மா தேவிபிள்ளை. மலையாள சினிமாக்களில் குணச்சித்திர நடிகை. 3 வயதில் நடிக்க வந்துவிட்டேன். மலையாள சீரியலில் என் முதல் நடிப்பு பயணம் துவங்கியது. 'வீணா' உள்ளிட்ட குறும்படங்கள், 'சம்மர் லவ்' உள்ளிட்ட மியூசிக் ஆல்பங்கள் என நடிப்பு வாய்ப்புகள் வரிசை கட்டின. மலையாளத்தில் 'பிரைஸ் ஆப் தி போலீஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன்.

மலையாள மக்களை ஈர்த்த 'செம்பருத்தி' மெகா சீரியல் என்னை ஒவ்வொரு வீடுகளிலும் தெரிய வைத்தது. அதே பெயரிலேயே தமிழில் அந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டது. அதன் மூலம் தமிழில் அறிமுகம் கிடைத்தது. தமிழில் நடிகர் 'மைக்' மோகனின் 'ஹாரா' படத்தில் அவருக்கு மகளாக நடித்தேன். என்னை சுற்றியே கதை அமைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து 'ஆத்ம காதல்' படத்தில் 2ம் கதாநாயகியாக நடித்தேன். தற்போது சுப்பன், 'வெள்ளைக்குச்சி' உட்பட தமிழில் 4 படங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

'ஹாரா' படத்தில் நடிக்கும் போது எனக்கு தமிழ் பேசத் தெரியாது. தமிழில் தான் பேச வேண்டும் என இயக்குநர் கண்டிஷன் போட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் என்னிடம் தமிழில் பேச வைத்தார். ஷூட்டிங் நடந்த 59 நாட்களில் தமிழை நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன். இது என் நடிப்பு பயணத்திற்கு திருப்புமுனையாக மாறியது.

இப்போது தமிழில் தான் அதிக படங்களில் சான்ஸ் கிடைக்கிறது. மாடலிங், விளம்பர படங்களில் நடிக்கிறேன். என் லட்சியம் ஐ.ஏ.எஸ்., ஆவது. தற்போது பிளஸ் 1 படிக்கிறேன்.

நடிப்பையும், படிப்பையும் பேலன்ஸ் செய்துகொள்கிறேன். நடிப்புக்காக படிப்பு நாட்களை தியாகம் செய்யும்போது அந்த நாட்களில் நடத்திய பாடங்களை 'நோட்ஸ்' கொடுத்து என் தோழிகள் எனக்கு உதவுகின்றனர். நடிப்பிற்கு என் பெற்றோர் முதல் பள்ளி நிர்வாகம் வரை ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

தமிழகத்தில் தான் அதிக படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளேன். தமிழர்கள் கலாசாரம், மரியாதையாக நடந்துகொள்ளும் விதம் எனக்கு பிடித்துவிட்டது. பிடித்துவிட்டால் ரசிகர்கள் கண்மூடித்தனமாக கொண்டாடுவது நடிகைகளுக்கான 'கிப்ட்'.

தமிழ் ரசிகர்களை நம்பி மலையாள தேசத்தில் இருந்து ஏராளமான நடிகர்கள் வருகின்றனர். அந்த வரிசையில் நானும் ஒருவர். இதுவரை 'சென்டிமெண்ட்' கேரக்டர்கள் தான் பெரும்பாலும் கிடைத்துள்ளது. எனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் என் திறமையை வெளிப்படுத்துவேன். சவாலான கதாநாயகி கேரக்டர் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் ஒரு 'ரவுண்ட்' வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !