‛ஆண்பாவம் பொல்லாதது' பெண்களுக்கு எதிரான படமல்ல: ரியோ ராஜ்
2023ல் வெளியான ‛ஜோ' படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ். இவர்கள் அடுத்ததாக அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ‛ஆண்பாவம் பொல்லாதது' படத்தில் இணைந்துள்ளனர். இதன் டீசர், டிரைலர் வெளியாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் அக்.,31ல் ரிலீசாகிறது.
சென்னையில் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில், நடிகர் ரியோ ராஜ் கூறியதாவது: பெண் பாவம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டனர். ஆண்கள் பற்றி பேசலாமே என்று தான் இந்த படம் எடுத்தோம். திருமணமான தம்பதிகளிடையே நடக்கும் பிரச்னைகளை ஆண்கள் சைடில் இருந்து பேசியிருக்கிறோம். பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக இருந்தாலும் சீரியஸான சில விஷயங்களையும் சொல்லியிருக்கிறோம்.
மகளிர் ஸ்டேஷனுக்குள் சென்றாலே, ஆண்கள் அக்யூஸ்ட், பெண்கள் விக்டிம் என இருக்கிறது. இந்த படம் அதுப்பற்றியும் பேசுகிறது. பெண்ணியம் பேசுபவர்களுக்கும் கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். இது பெண்களுக்கு எதிரான படம் கிடையாது, அதே நேரத்தில் ஆண்களுக்கு சப்போர்ட்டிவான படம். பெண்களை கவர்கிற வகையில், அவர்களின் கருத்தை சொல்லும்வகையிலும் சீன்கள் இருக்கிறது.
ஹீரோயின் மாளவிகா மனோஜ் சிறப்பாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஏ.வெங்கடேசும் முக்கியமான வேடத்தில் வருகிறார். இந்த படத்தில் சித்துகுமார் இசையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். படத்தில் உதவி இயக்குனராகவும் வேலை செய்து இருக்கிறேன். இந்த நேரத்தில் என் மனைவி ஸ்ருதிக்கு நன்றி. இந்த படம் பார்க்கிற மனைவிமார்களுக்கு படம் பிடிக்கும். கணவர் மீது அன்பு அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் கலையரசன் கூறுகையில், ‛‛இப்படத்தை எடுக்கும் போது, இதற்காக பல கேஸ்களை படித்தோம். பல இடங்களில் ஆண்களுக்கு அநீதிகள் நடப்பது தெரிந்து, அதை படத்தில் சொல்லிவிட வேண்டும் என கதை எழுதியுள்ளோம். இந்த படம் பார்த்தப்பின், நிச்சயம் ஆண்களை பார்க்கும் கண்ணோட்டம் மாற வாய்ப்புள்ளது. படம் வெளியானப்பின், பாடல்கள் பேசப்படும். சென்சாரில் படத்தில் எந்தவித ‛கட், மியூட்' இல்லாமல் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் விதமாக ‛யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் நீளம் 2 மணிநேரம் 3 நிமிடம்'' என்றார்.