கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை
சென்னையில் நடந்த 'வள்ளுவன்' பட விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இன்றைய சினிமா நிலவரம், தயாரிப்பார்கள் நிலை குறித்து பல கருத்துகளை பேசினார். அவர் பேசுகையில் ''கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு 2 ஆயிரத்து 500 புதிய தயாரிப்பாளர்கள் வந்து இருக்கிறார்கள். இது நல்ல விஷயம். ஆனால், அதில் 2 ஆயிரத்து 100 தயாரிப்பாளர்கள் ஒரு படத்துடன் காணாமல் போய்விட்டார்கள்.
மீதமுள்ள 400 பேர் மட்டுமே அடுத்த படம், அடுத்த சில படங்களை தயாரித்தார்கள். காரணம், சினிமாவில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கிறது. சினிமா நிலவரம் அப்படி இருக்கிறது. நானும் தயாரிப்பாளராக இருந்தேன், பிரபல இயக்குனராக இருந்தேன். 1991 தொடங்கி பல ஆண்டுகள் நான் தயாரிப்பாளராக இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் 16 கார்கள் இருந்தன. தென்னிந்தியாவில் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணினேன். சில ஆண்டுகள் கழித்து அந்த கார்கள் இருந்தன. ஆனால், அதற்கு டீசல் போட என்னிடம் பணம் இல்லை. சினிமா மாறிக்கொண்டே இருக்கும். அப்போது நான் ஆட்டோவில், பஸ்சில் போக பழகிக்கொண்டேன்'' என்றார்.