போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி
சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் வில்லன், குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த போஸ் வெங்கட் 'கன்னிமாடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆணவ கொலையை மையமாக கொண்ட இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அடுத்து இயக்கிய 'சார்' படம் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் போஸ் வெங்கட் இயக்கும் 3வது படம் தொடங்கி உள்ளது. இந்த படத்தை கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி, வி. மதியழகன் இணைந்து தயாரிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது.
படம் பற்றி போஸ் வெங்கட் கூறும்போது விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும்.
அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இதை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.